செய்திகள்

பொது சிவில் சட்ட விவகாரம்: காங்கிரஸ் மவுனம் காப்பது ஏன்?

கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரம், ஜூலை 7–

பொது சிவில் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கள்ள மவுனம் காப்பது ஏன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “பொது சிவில் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறதா? காங்கிரஸ் கட்சியின் சந்தேகத்திற்கிடமான மௌனம் வஞ்சகமானது. இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான சங்பரிவார்களின் தாக்குதல்களை எதிர்ப்பது, காலத்தின் தேவையாக இருக்கும்போது, அவர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் கட்சி தயாரா?” என்று கேட்டுள்ளார்.

காங்கிரசில் வெவ்வேறு குரல்கள்

முன்னதாக இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் வீரபத்ரசிங்கின் மகனும், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரதிபா சிங்கின் மகனும், அம்மாநில அமைச்சருமான விக்ரமாதித்ய சிங், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும் என்று தெரிவித்திருந்தார். பொது சிவில் சட்டத்தைப் பொருத்தவரை, இதில் நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை நம்புகிறோம்.

எந்தச் சட்டத்தையும் கொண்டு வருவதற்கு முன், இந்தச் சட்டம் தங்களுக்கு எதிரானது என்று யாரும் நினைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் இடையே வலுவான கருத்தொற்றுமை உருவாக்கப்பட வேண்டும். அனைவரின் ஒப்புதலோடு இந்த சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று விக்ரமாதித்ய சிங் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம், அரசியல்-சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தின் மூலம் ஒரு நாடு ஒன்றிணைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு இந்திய மக்களின் பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு கனவு. பெரும்பான்மை அரசாங்கத்தால் அதை மக்கள் மீது திணிக்க முடியாது. பொது சிவில் சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்டால் அது பிளவுகளை விரிவுபடுத்தும். பாரதீய ஜனதாவின் தோல்வியை மறைக்கவே பாஜக பொது சிவில் சட்டத்தை களமிறக்குகிறது’ என்று தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *