தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கேள்வி
மதுரை, டிச.12-–
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பம் நடுவது வழக்கமாக நடந்து வருகிறது.
குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடப்படும் இந்த கொடிக்கம்பங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏன் அகற்றக்கூடாது? என்று அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மதுரை விளாங்குடியை சேர்ந்த சித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் மதுரை மேற்கு 6-ம் பகுதி அண்ணா தி.மு.க. செயலாளராக உள்ளேன். அண்ணா தி.மு.க.வின் 53-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு எங்கள் பகுதியில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி கேட்டு மதுரை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தோம். அந்த மனுவின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அவர், பட்டா இடங்களில் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என கூறிவிட்டார். அதே பகுதியில் பல்வேறு கட்சி கொடிக்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. எங்கள் கட்சி கொடிக்கம்பத்துக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்ட இடத்தில் அண்ணா தி.மு.க. கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி வழங்கும்படி மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி, இதே பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் தமிழகத்தின் பிரதான கட்சி ஒன்றின் கொடிக்கம்பம் நடப்பட்டு உள்ளது. அதன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மனுதாரர் தரப்பு கட்சி கொடிக்கம்பம் நடுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர் என வாதாடினார்.
நீதிபதி கேள்வி
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பொது இடங்களில் நடப்பட்டு உள்ள கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அனைத்தையும் ஏன் அகற்ற உத்தர விடக்கூடாது? என கேள்வி எழுப்பினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர், தமிழகம் முழுவதும் கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கும் பகுதிகளில் எத்தனை விபத்துகள் நடந்துள்ளன என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு விசார ணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.