செய்திகள்

பொதுமக்கள் பாராட்டும் படியாக மாவட்ட கலெக்டர்கள் பணியாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Makkal Kural Official

சென்னை, பிப்.2-

‘சிறந்த மாவட்ட கலெக்டர் என்று பொதுமக்கள் பாராட்டும் படியாக பணியாற்ற வேண்டும்’ என்று மாவட்ட கலெக்டர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் ஆர். சதீஷ் (தர்மபுரி), எஸ்.சரவணன் (திண்டுக்கல்), எம்.பிரதாப் (திருவள்ளூர்), சி. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), எஸ். சேக் அப்துல்ரகுமான் (விழுப்புரம்), கே.தர்பகராஜ் (திருவண்ணாமலை), வி.மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர்.சுகுமார் (நெல்லை), கே.சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் நேற்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்தச் சந்திப்பின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய மாவட்ட கலெக்டர்களிடம் பேசினார். அப்போது, ‘மக்களுடன் இன்று (அதாவது நேற்று) முதல் நேரடி தொடர்பில் களத்தில் இருக்கப் போகிறீர்கள். அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதலமைச்சரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்தா லோசித்து தீர்வு காண வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டமாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்போது, அங்கு மக்களை சந்திக்கிற போது, அவர்கள் எங்கள் மாவட்ட கலெக்டர் சிறந்த மாவட்ட கலெக்டர் என்று பாராட்டும் படியாக பணியாற்ற வேண்டும்.

மக்களின் பாராட்டைப் பெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை கவனமாக கண்காணித்து திட்டங்கள் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட கலெக்டராக பணியாற்ற இருக்கும் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களை யும் கூறி கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *