செய்திகள்

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி கிடைக்கும்: அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா வைரஸ் 2–வது அலை: தமிழகத்தில் சாத்தியக்கூறு குறைவு

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி கிடைக்கும்:

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சியில் 2–ம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டார்

திருச்சி, பிப்.21

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை வருவதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு என்று அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 2வது கட்டமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்தியா முழுவதும் கடந்த மாதம் 16 ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

சில மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை சற்று உயர்ந்து இருக்கிறது ஆனால் தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சுகாதாரத்துறை பணியாளர்களின் தொடர் உழைப்பு தான்.

சமூக இடைவௌி மற்றும் மாஸ்க் அணிவது மட்டுமின்றி, கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை மருத்துவ பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் என 3 லட்சத்து 53 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பொது மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனுமதிக்கு காத்திருக்கிறோம். அதற்கான அனுமதி வெகு விரைவில் கிடைத்து விடும்.

14 லட்சத்து 85 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஒரு லட்சத்து 89 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசியும் வந்துள்ளது.

முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள், அடுத்த 28 வது நாளில் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்படி, முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தயாரிப்பான முதல் டோஸ் கோவேக்சின் எடுத்துக் கொண்ட 28 நாட்களுக்கு பின், 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளேன். ஊசி போட்ட வலி கூட தெரியாத வகையில், எனக்கு எவ்வித பக்க விளைவும் இல்லை.

தடுப்பூசி என்றாலே அது பற்றிய மாற்றுக் கருத்துக்கள் வருவது இயல்பு. அதை புறந்தள்ளும் வகையில் தயக்கத்தை போக்கும் வகையிலும் நானும், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாவட்ட அதிகாரிகளும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு நாளுக்கு 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கொரோனாவை இல்லாமல் செய்வதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகளில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தடுப்பூசியும் போட்டு வருகின்றனர். ஐசிஎம்ஆர் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதித்த இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பானவை. எவ்வித தயக்கமும் இல்லாமல், அனைவரும் விரும்பிய தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். புரளிகள் எதையும் நம்ப வேண்டியதில்லை.

தமிழகத்தில் மிகவும் கட்டுக் கோப்பாக இருப்பதாலும், மருத்துவர்களின் துணிச்சலான செயல்பாடுகளாலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு. வைரஸ் தடுப்பில் இருந்த சவால்களை சமாளித்து, இறப்பு விகிதமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சிறப்பான பணியால், உச்சகட்ட பயத்தில் இருந்த நிலை மாறி, சகஜ நிலைக்கு மாறியுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பேட்டியின் போது அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் டீன் டாக்டர் வனிதா, திருச்சி மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருமண்டபம் பத்மநாபன், மாலைக்கோட்டை பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா மற்றும் ஜவஹர்லால் நேரு மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *