சென்னை, ஏப். 30–
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தகராறில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில், பேருந்திற்காக நின்றுக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவர்களை, மற்றொரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், மாணவர் ஒருவரின் பல் உடைந்துள்ளது. மேலும், அங்கிருந்த பேருந்து ஒன்றின் கண்ணாடியும் உடைக்கப்படுள்ளது.
7 பேரிடம் விசாரணை
இச்சம்பவத்தால் அங்கு இருந்த பயணிகள் அச்சத்துடன் நாலாபுறமும் சிதறி ஓடியதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த தகராறில் ஈடுபட்ட இருகல்லூரியை சேர்ந்த 7 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களுக்குள் கோஷ்டி மோதல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மை காலமாகவே மாணவர்கள் மத்தியில், மோதல் போக்கு அதிகரித்து வருவது வருத்தம் தரக்கூடியதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.