உன் வீட்டுக்காரர் காலையில் அஞ்சு மணிக்கு மண்வெட்டியை தூக்கிட்டு போறத நான் மெயின் ரோட்டில பார்த்தேன் என்று பக்கத்து வீட்டு பாக்கியம் கமலாவிடம் சொன்னாள். அதற்கு கமலா வாக்கிங் போறப்ப நீங்க பாத்திருப்பீங்க என்றாள். வாக்கிங்க்கு போறவர்ரு மண்வெட்டியுடனா போவாங்களா? எங்கேயாவது வேலைக்கு போறாரா? என்று கமலாவிடம் பாக்கியம் கேட்டாள்.
என்ன மண்வெட்டிய தூக்கிட்டு போறாரா? கமலாவின் புருவங்கள் வளைந்தன.
“ ஆமாடி! மண்வெட்டியோட போறத என் ரெண்டு கண்ணால பார்த்தேன். நான் பால் வாங்க மெயின் ரோட்டுக்கு போனப்ப பாத்தேன். என்று கூறியவள், சரிசரி எனக்கு வேலை இருக்கு, நான் முடிச்சிட்டு வந்திடுறேன் என்றவாறே பாக்கியம் அவள் வீட்டினுள் சென்றாள்.
பாக்கியம் இப்படிக் கூறியதும் கமலாவிற்கு அதிர்ச்சியால் அசையாமல் நின்றாள்.
அவள் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை நெருப்பாய் எரித்தன. மண்வெட்டியோட வாக்கிங்குக்கு ஏன் போனாரு? ஒன்றும் புரியாமல் குழம்பினாள். வரட்டும் அவரு நேரடியாக கேட்போம் என்று மனதில் நினைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று சமையல் அறையில் காபி போட தயாரானாள்.
கமலாவின் கணவர் மருதன் பொதுத்துறை வங்கியில் காசாளராக இருந்து பணியில் ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று ஒரு வருடம் தான் ஆகியது. அவர் பார்த்த வேலையில் நேர்மையாக இருந்ததற்கு சிறந்த பணியாளர் விருது வாங்கியவர். தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கவழக்கம் உள்ளவர். பிறருக்கு உதவும் குணம் உள்ளவர். எல்லோரிடமும் நட்பாக பழகக்கூடியவர் அவர் குடியிருக்கும் தெருவில் தண்ணீர் பிரச்சனை, கழிவுநீர் பிரச்சனை போன்ற அடிப்படை விஷயங்களுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பவர். மருதனுக்கு இரண்டு மகள்கள் இருவருக்கும் திருமணம் முடித்து விட்டார். அவர்கள் தனித்தனியாக வசிக்கின்றனர். ஓய்வுகாலத்தை பேரன் பேத்திகளுடன் பொழுதுபோக்குபவராவார்.
மேலும் அவர் பணியில் ஓய்வானதிலிருந்து மனைவிக்கு அவ்வப்போது வீட்டு வேலையில் ஒத்தாசையுடன் இருப்பார். சமையல் நேரத்தில் மனைவிக்கு காய்கறி நறுக்கி கொடுப்பார், சில நேரங்களில் பாத்திரங்கள் தேய்த்து உதவி செய்வார். கமலா தன் கணவனை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வாள்.
அப்படிப்பட்டவர் இன்று மண்வெட்டியுடன் வாக்கிங் போயிருப்பது கமலாவிற்கு இது விநோதமான விஷயமாகப்பட்டது. காரணமில்லாமல் அவர் மண்வெட்டியுடன் சென்றிருக்கமாட்டார். ஒரு நியாயமான விஷயத்திற்கு மண்வெட்டியை கொண்டு சென்றிருப்பாரோ! ஒருவேளை பக்கத்துவீட்டு அக்கா சொன்ன மாதிரி வேலைக்கு போயிருப்பாரோ? மனதில் பல கேள்விகளுடன் சமையலறையில் கமலா காபி போட்டுக் கொண்டிருந்தாள்.
அப்போது வாசல் கதவு சப்தம் கேட்டு கதவைத் திறக்க வெளியே வந்தாள் கதவைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தால் கமலாவின் கணவர் மருதன் மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்தார்
கமலா சிறிது கோபமாக முகத்தை வைத்து, வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்தேன்” என்று பேசியவள், மண்வெட்டியுடன் எங்கே போயிட்டு வர்றீங்க? என்று கேள்வியை தொடுத்தார்.
கமலா இப்படி கேட்பாள் என்று மருதனுக்குத் தெரியும். உடனே அவர் வீட்டுவாசல நிக்கவச்சு பேசலாமா? என்று கூறியவாறே தண்ணீர்த்தொட்டியில் தண்ணீர் மோர்ந்து கைகால்களை கழுவ ஆரம்பித்தார்.
“ஏங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம நீங்க பாட்டுக்கு கைகால்களை கழுவிவிட்டு இருக்கீங்களே “வாக்கிங்குக்கு போகும்போது மண்வெட்டியோட ஏன் போனீங்க?” வேலைக்கு எதுக்காவது போனீங்களா? சொல்லுங்க! என்று சப்தமான குரலில் கேட்டாள்.
மனைவி விடுவதாக இல்லை என்று உணர்ந்த மருதன் வீட்டினுள் சென்று சோபாவில் உட்கார்ந்தவாறே, இப்ப சொல்றேன், வந்து பக்கத்தில் உட்கார் என்றார். கமலாவும் உட்கார்ந்தாள். முகத்தைத்துண்டால் துடைத்தவாறே பேச ஆரம்பித்தார் மருதன்.
நான் ரிட்டையரானதிலிருந்து வாக்கிங் போறது உனக்குத் தெரியும்.ஆனா இன்னிக்கு மண்வெட்டியோட ஏன் போறேன்னா நேத்து ரெண்டு மரக்கன்றுகளை வாங்கி வந்தேன். அதை நடுவதற்காக மண்வெட்டியுடன் போனேன்.
கமலாவிற்கு ஒன்றும் புரியாமல் விழித்து, நீங்க ஏன் மரக்கன்று நட போனீங்க?
சொல்றேன், பொறுமையா கேள்! நான் வழக்கமா போற மெயின் ரோட்டு ஓரம் நட்டுட்டு வந்தேன். மெயின் ரோட்டுல மரத்தை எல்லாம் வெட்டுனதுனால வெறிச்சோடி இருந்துச்சு. அதனால ரெண்டு மரக்கன்றுகளை நட்டுட்டு வந்தேன். கமலா உண்மையாகவே கோபப்பட்டு எரிமலையாக வெடித்தான்.
“ஏங்க உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா” எதுக்காக தேவையில்லாத வேலை பாக்கறீங்க?. மரம் நடுகிற வேலையை கவர்மெண்ட் பாத்துக்கும். நீங்க போயி இந்த வேலையை பார்க்கலாமா? அதுக்கு டெய்லி தண்ணீர் ஊத்துறது யாரு? அதை பராமரிக்கனும், வேண்டாத வேலை பாத்திட்டு வந்துட்டீங்களே. ரிட்டையர் ஆனமா ரெஸ்ட் எடுத்தோமா என்று இல்லாம இப்படி செய்யலாமா? இது உங்களுக்கே நல்லதாயிருக்கா? மனைவியின் சரமாரியான கேள்விகளால் கொஞ்சமும் பதட்டமில்லாமல் மரக்கன்று நடுவறது தப்பா? நாலு பேத்துக்கு நல்லது தானே செஞ்சேன். அந்த நாலு பேரும் உங்கள கேவலமா பாக்குறாங்க. அது உங்களுக்கு தெரியலையா?”.
அடியே கமலா, உனக்கு விபரமா சொல்றேன்,என்று மருதன் பேச ஆரம்பித்தார். “நீ மரக்கன்ற நடுறது தப்பா சொல்றியே .நம்ம பெரியவங்க உன்ன மாதிரி யோசிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு நாடு சுடுகாடாயிருக்கும்.”
பின்னாடி வாழ்றவங்களுக்கு முன்னாடியே நம்ம முன்னோர்கள் நல்ல காரியங்க நிறைய செஞ்சிருக்காங்க, அதுல ஒன்னு தான் இந்த மரக்கன்று வச்சது. ஊரு பசுமையா இருக்கனும்; மழை நல்லா பேயனும்; சுத்தமான இயற்கை காற்ற அனுபவிக்கனும் காய்கனிகள் கொடுக்கனுன்னு நினைச்சி தான் மரக்கன்று செடி கன்று நட்டாங்க ; அதனால தான் நம்ம பெரியவங்க வீட்டிலேயும் ரோட்டிலேயும் மரக்கன்றுகள் வச்சாங்க. அவங்க வழியில் நாமும் ஏன் மரக்கன்று வைக்கக்கூடாது?.
நம்ம வீடுகட்டினா அது சுயநலம். ஒரு மரக்கன்று வச்சா அது பொது நலம். நம்ம வைக்கிற மரக்கன்று நம் பிள்ளைகளுக்கும் வருகாலத்துவர்களுக்கும் உதவும். அதுபோக வக்கிற மரக்கன்று வளர்ந்து அது பெரிய மரமானா அதுல எத்தனை காக்கா குருவிகளுக்கு வீடாகும் தெரியுமா?. ஆடு மாடுக நிழலுக்கு ஒதுங்கி இரையும் சாப்பிடும். ஏன் நாமலே வெயிலுக்கு ஒதுங்கமாட்டோமோ? நம்ம பெத்த பிள்ளைகளை எவ்வளவு அக்கறையா வளர்த்து ஆளாக்குகிறோம். அதுபோல் ஊருக்கு நல்லது செய்ற மரக்கன்று ஏன் வளர்க்ககூடாது.
மரங்கள் வளர்த்தால் மலை வளம் பெருகுமுன்னு நினைச்சு தானே பெரியவங்க மரம் வளர்க்க சொல்றாங்க. நம்ம மறைந்த அப்துல்கலாம் விஞ்ஞானி ஐயாவே மரம்வளங்கன்னு தானே சொன்னாரு, இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் கமலா., விரிவுரையாளர் போல் விளக்கமா விவரிச்சு சொன்னார் மருதன். எல்லாவற்றையும் கேட்ட கமலா இனி நானும் உங்களோட ஒத்தாசையா இருப்பேன்.
நீங்க வைக்கிற மரக்கன்று வளர நான் தண்ணீர் ஊத்துவேன் என்ற கமலா ,
கணவருக்கு கனிவாக காபி கொடுத்தாள்.