சென்னை, டிச. 30–
மக்களை ஏமாற்றாமல் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று கம்யூனிஸ்ட், பா.ம.க. கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
கடந்த 2021 புதிய ஆட்சி அமைந்தது முதல் மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டி வருகிறது என்பதுடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது உண்மையாகும். இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழ்நாட்டில் நிவாரண பணிகளுக்கும், மக்கள் மறு வாழ்வை உறுதி செய்யவும் 2021 முதல் இதுவரை ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு ரூ.82 ஆயிரத்து 458 கோடி வழங்க வேண்டும் என பாஜக அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. அரசு ரூ.276 கோடி மட்டுமே வழங்கியிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம் அளிக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இருந்தும் ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் நிதி அமைச்சரின் முடிவின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் தி.மு.க.வின் இரட்டை வேடம் ஆகும்.
கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.