இந்திய நாட்டு நேரத்தின்படி இரவு 10 மணி.
துபாயிலிருந்து செல்பேசியில் ராஜ்குமார் தனது தம்பி ஆனந்திடம் பேசினான்.
‘‘ஆனந்த்’’!
‘‘சொல்லுங்கண்ணா’’
‘‘நான் பேசறது உனக்குத் தெளிவாகக் கேட்குதா’’
‘‘கேட்குது அண்ணா’’
‘‘சரி, அப்புறம்.. நீ நல்லா இருக்கிறியா? உன் வேலையெல்லாம் எப்படிப் போயிகிட்டிருக்குது?’’
‘‘நான் நல்லா இருக்கேன், என் வேலை வழக்கம் போல போய்கிட்டிருக்குது, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லே, சரிண்ணா, நீங்கள் எப்படி இருக்கீங்க? அண்ணி, குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க? முதலிலே அதைச் சொல்லுங்கள்’’
‘தம்பி ராஜ், நானும் என் வீட்டாரும் நல்லா இருக்கோம். எனக்கு ஒரே ஒரு குறை தான். மற்றபடி எதுவும் இல்லே.
‘‘அண்ணா! உங்களுக்கு என்ன மனக்குறை? அதைச் சொல்ல முடியுமா? என்று கேட்டான் ஆனந்த்.
‘ராஜூ, என் மனக்குறை என்னன்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அது என்னன்னா நம்ம கிராமத்திலே வயசான காலத்திலேயேயும் சுறுசுறுப்பா விவசாயத் தொழில் செய்துகிட்டிருக்கிற நம்ம அப்பா, அம்மாவுக்கு விவசாயத் தொழிலிலிருந்து ஓய்வு தரணும். நான் துபாயிலிருந்து பொங்கல் லீவுக்குத் தஞ்சாவூர் வரும்போது இது சம்மந்தமா அம்மா, அப்பாவிடம் மனம் விட்டுப் பேசணும். என் விருப்பத்துக்கு அப்பா, அம்மாவை சம்மதிக்க வைக்கணும். இது நடக்குமா? இது முடியுமா? என்று கேட்டான் ராஜ்குமார்.
‘‘அண்ணா! அது நடக்குமா? அது முடியுமா? என்று கேட்கிறது நம்பிக்கை இல்லாதவங்க தான். அது நடக்கும், இது முடியும் என்று நினைப்பது தான் உங்களுக்கு நல்லது நடக்க உதவி செய்யும். பொங்கல் லீவுக்கு எத்தனாம் தேதி வர்றீங்க தஞ்சாவூருக்கு? அதை இப்பச் சொல்லுங்க என்றான் ஆனந்த்.
‘‘தம்பி ராஜூ, தஞ்சாவூருக்கு 12 ஆம் தேதி வர்றேன், நானும் நீயும் நம்மா அப்பா, அம்மாவிடம் மனம் விட்டுப் பேசலாம். சரிப்பா, மத்த விஷயங்களை நேரில் விவரமா பேசுவோம். இப்ப போனை வச்சிடறேன்’’ என்றான் ராஜ்குமார்.
பொங்கல் லீவில் துபாயிலிருந்து தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்த மறுநாள், ராஜ்குமார் தனது பொற்றோரிடம் பேச ஆரம்பித்தான். அப்போது அவனது தம்பி ஆனந்தும் உடனிருந்தான்.
‘‘அப்பா, அம்மா நீங்க ரெண்டு பேரும் விவசாயத் தொழில் செய்து தான் என்னையும் தம்பியையும் என்ஜினீயர் வேலைக்குப் படிக்க வச்சீங்க, வேலையில் சேருவதற்க உதவி செஞ்சீங்க. அதை நாங்க மறக்கலே, மறுக்கலே, இப்ப, உங்க ரெண்டு பேருக்கும் 60 வயசுக்கு மேலே ஆயிருச்சு. இன்னமும் கடுமையா உழைக்கணுமா? நானும், தம்பியும் உங்களைக் காப்பாத்தறோம். நம்ம வசம் இருக்கிற வயலைத் தாய் மாமன் மாணிக்கம் பொறுப்புலே விட்டுடுவோம். விளைச்சல்லே நமக்கும் சரிசமமான பங்கு வாங்கிக்குவோம். இந்தத் திட்டத்துக்கு நீங்க சம்மதம் தரணும், தருவீங்களா? என்று மனம் உருகக் கேட்டான் ராஜ்குமார்.
மகன் ராஜ்குமாரின் மனம் உருகிய பேச்சால் மனம் மாறிய அவரது பெற்றோர்கள் ராமசாமியும் ராஜலட்சுமியும் மகனின் திட்டத்துக்கு மனப்பூர்வமாக சம்மதம் சொன்னார்கள். பெற்றோர்கள் தந்த சம்மத் ராஜ்குமாருக்கு மிகப்பெரிய ‘பொங்கல் பரிசு’ஆக இருந்தது.