செய்திகள்

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 4.44 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 14–

பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகளில் 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன.

கடந்த 12–ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்பு பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம் உள்ளிட்ட 5 இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுதவிர தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. பயணம் மேற்கொள்ள 2.30 லட்சம் பேர் முன்பதிவு செய்ததாகவும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 12 மணி வரை அரசு பேருந்துகளில் 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இது தவிர கார் மற்றும் வேனிகளிலும் மக்கள் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டனர். இதனால் நெஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். விமான டிக்கெட்டுகளும் உயர்ந்தே காணப்பட்டது.

இதேபோல அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு முடிந்த நிலையில், முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலை மோதியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரெயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *