பொதுமக்கள் பங்கேற்கலாம்
சிறந்த படைப்பாளிகளுக்கு சான்றிதழ், பதக்கம்
சென்னை, ஜன.7–
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்குபெறும் வகையில் 8 பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதில் சிறந்த படைப்பைப் படைத்த படைப்பாளிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பாராட்டி, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கவுள்ளார்.
நமது பண்பாட்டு விழுமியங்களான, வீரம், கொடை, உழைப்பு ஆகியவற்றை உணர்த்தும் இந்த பொங்கல் திருநாளுக்கு, பெருமை சேர்க்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, 1.கோலப்போட்டி, 2. ஓவியப்போட்டி, 3. புகைப்படப் போட்டி, 4. ரீல்ஸ் போட்டி, 5. பாரம்பரிய உடைப் போட்டி, 6. மண்பானை அலங்கரித்தல் போட்டி, 7. சுயமிப் போட்டி, 8.ஆவணப்படங்கள் முதலிய கலைப்போட்டிகளை நடத்துகிறது.
மாணவ- மாணவியர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு பொதுமக்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளும் – அதன் விதிமுறைகளும் பின் வருமாறு:–-
1. கோலப் போட்டிகளின் கருப்பொருள்: பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர் மரபுகளைக் காட்சிப்படுத்தும் கோலங்கள். அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
2. ஓவியப் போட்டிகளின் கருப்பொருள்: உழவர் பொங்கல் திருநாள் பற்றிய ஓவியங்கள், வகைகள் – (பெயிண்டிங், பென்சில், ஸ்கெட்ச், க்ரேயன்ஸ்). அனைத்து வயதினரும் பங்கேற்கலாம்.
3. புகைப்படப் போட்டியின் கருப்பொருள்: ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய காட்சிகள், பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரம் போன்றவற்றைப் புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும். அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
ஒரு நிமிடத்துக்குள்…
4. ரீல் போட்டிகள் (ஒரு நிமிடத்திற்குள்) கருப்பொருள்: நாட்டுப்புறக்கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், சிலம்பாட்டம், கரகாட்டம், ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு காளை மாடுகளைத் தயார்படுத்துதல். அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
5. பாரம்பரிய உடைப் போட்டிகள்: 1 வயது முதல் 13 வயது வரை மட்டுமே.
6. மண்பானை அலங்கரித்தல் போட்டி: அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
7. சுயமிப் போட்டிகளின் (Selfie) கருப்பொருள்: பொங்கல் பானையுடன் ஒரு செல்பி, ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு செஃல்பி, பொங்கல் நிகழ்ச்சிகள் உடன் செல்பி எடுத்து அனுப்பவும். அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.
8. ஆவணப்படத்தின் கருப்பொருள்: தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுகிறது, ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள். அனைத்து வயதினரும் பங்கு பெறலாம். போட்டிகளில் அனைவரும் பங்கேற்று பொங்கலை கொண்டாடி மகிழலாம்.
படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்டதாக இருத்தல் கூடாது. உங்கள் சுயமான படைப்பாக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை 20–ந் தேதிக்குள் க்யூ-ஆர் கோட்டினை ஸ்கேன் செய்து விண்ணப்பித்தினைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். போட்டியாளர்கள் க்யூ-ஆர் கோட்டில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப முடியவில்லை என்றால் (tndiprmhpongal2025@gmail.com) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.