சென்னை, ஜன.12-
பொங்கல் பண்டிகையையொட்டி வாரிசு, துணிவு திரைப்படத்துக்கு 7 நாட்கள் தியேட்டர்களில் கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’, விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று முன்தினம் வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு சிலர் திரைப்படம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களான 14, 15, 16 மற்றும் 17ந்தேதிகளில் ஏற்கனவே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த நாட்களிலும், 12-ந்தேதி (இன்று), 13-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய நாட்களிலும் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பனீந்திர ரெட்டி நேற்று இரவு அரசாணை பிறப்பித்தார்.
அதில், பொங்கல் திருவிழா வாரமாக கருதி, 12, 13 மற்றும் 18-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடவும், 14, 15, 16 மற்றும் 17 ஆகிய 4 நாட்களில் காலை 11.30 மணிக்கும், 12, 13 மற்றும் 18-ந்தேதிகளில் மதியம் 2.30 மணிக்கும் கூடுதல் காட்சி திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டுமே தியேட்டர்கள் திரையிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.