மாணவியின் சமயோசித செயல்பாட்டுக்கு பாராட்டு
சென்னை, செப். 11–
சென்னையில் பைக் டாக்சியில் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நேற்று இரவு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர், ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல சூளைமேட்டிலிருந்து ஓலா பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அந்த மாணவியை அழைத்துச்செல்ல முகப்பேரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பைக்கை ஓட்டி வந்தார். பைக்கில் செல்லும் போதே ரமேஷ் அந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் சமயோசிதம்
மேலும் அவர் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவி, நடந்தவற்றை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் தனது குடும்பத்தினருக்கு நடந்தவற்றை பயணத்தின் போதே குறுஞ்செய்தி மூலமாக தெரிவித்துள்ளார்.
பின்னர் ராயப்பேட்டையில் உள்ள மாணவியின் வீட்டிற்கு ரமேஷ் பைக்கை ஓட்டி வந்தவுடன், ரமேஷை பிடித்து கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் ராயப்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணைக்கு பிறகு ரமேஷை கைது செய்தனர். மேலும் மாணவியின் சமயோசித செயல்பாட்டுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
ராயப்பேட்டை போலீசார் ஓலா பைக் டாக்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து கண்டிக்கவும், அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.