செய்திகள்

போதுமான நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை

நிலக்கரித் துறை அமைச்சகம் விளக்கம்

டெல்லி, அக். 11–

மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளைச் சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது என நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும், மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் இந்திய ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நிலக்கரி துறை அமைச்சகம் கூறி இருப்பதாவது:–

மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது நான்கு நாட்களுக்கு போதுமானது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளது. அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது.

தவறான அச்சம்

நிலக்கரி நிறுவனங்களிலிருந்து அதிக அளவிலான சப்ளை காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி, இந்தாண்டு சுமார் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தேவையின் ஒருநாள் சராசரி அளவு 18.5 லட்சம் டன்கள். பருவமழை நீடிப்பதன் காரணமாக, நிலக்கரி விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு, நிலக்கரி நிறுவனங்களிலிருந்து நாள்தோறும் நிலக்கரி அனுப்பப்படுகிறது. அதனால் நிலக்கரி இருப்பு குறைவு என்ற அச்சம் தவறானது. உண்மையில், இந்த ஆண்டு, உள்நாட்டு நிலக்கரி விநியோகம், நிலக்கரி இறக்குமதியைக் கணிசமாக மாற்றியமைத்துள்ளது.

நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்கள் அல்லாத அலுமினியம், சிமென்ட், எஃகு போன்ற ஆலைகளுக்கும், நிலக்கரி இந்தியா நிறுவனம், தினந்தோறும் 2.5 லட்சம் டன்கள் நிலக்கரியை அனுப்புவது, நாட்டில் போதிய நிலக்கரி இருப்பு உள்ளதை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

நிலக்கரி இந்தியா நிறுவனத்தின் கிடங்குகளில் இருந்து நேற்று முன்தினம் மொத்தம் அனுப்பப்பட்ட நிலக்கரி 1.92 மில்லியன் டன்கள். ஆனால் மொத்த நுகர்வு 1.87 மில்லியன் டன்கள். ஆகையால், நுகர்வை விட, நிலக்கரி சப்ளை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *