சிறுகதை

பேருந்து நிறுத்தம் – ராஜா செல்லமுத்து

அனல் கக்கும் மதிய வேளையில் பேருந்து நிறைய ஆட்களை ஏற்றிக்கொண்டு தார் சாலை வழியே நகர்ந்து கொண்டிருந்தது ஓர் அரசுப் பேருந்து.

செங்கல் சூளைக்குள் இருப்பதாக உணர்ந்த பயணிகள் தங்கள் கைகளில் இருக்கும் கைக்குட்டையைக் கொண்டு முகம் கழுத்தை துடைத்துக் கொண்டார்கள். பெண்கள் தங்கள் முந்தானையில் வடியும் வியர்வையைத் துடைத்துச் சரி செய்து கொண்டார்கள் .

சராசரியாக எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று சென்று கொண்டிருந்தது பேருந்து.

அக்னி நட்சத்திரம் அப்படின்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன ? என்று பேருந்தில் பயணித்த ஒருவர் கேட்டபோது அதிகமான வெப்பம் உள்ள நாள் தான் அக்னி நட்சத்திரம்னு சொல்றாங்க எனக்கு என்னமோ அதை பற்றி தெரியல என்றான் மதன்.

ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. சூரியன் தானே கொதிக்குது .அதுக்கு ஏன் அக்னி சூரியன் தான பெயர் வைக்கணும்?ஏன் அக்னி நட்சத்திரம்னு பேர் வைக்கிறாங்க என்று ஒருவன் பயணி விளக்கம் கேட்க

எனக்கு தெரியல என்றான் மதன்.

இருந்தாலும் இவ்வளவு வெயில் ஆகாதுங்க என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பேருந்து பயணம் செய்தார்கள்.

திடீரென்று ஒரு நிறுத்தத்திற்கு முன்னால் பேருந்து நின்றது.மதன் மற்றும் சிலர் பேசிக் கொண்டிருந்தனர்

ஏன் இந்த இடத்தில பஸ்ஸ நிறுத்தி இருக்கிறாங்க என்று

ஒரு பெண் பயணி கேட்க தெரியல என்றான் மதன்.

ஆனால் பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் இறங்கி இறங்கிப் போய் ஏதோ வாங்கிக் கொண்டு வருகிறார்கள் என்பது மட்டும் மதனுக்குத் தெரிந்தது .

என்ன இது? என்று விழித்த மதன் மற்றும் பலரும் பேருந்தை விட்டு இறங்கிப் பார்த்தார்கள்.

தார்ச் சாலையில் ஒருவர் மோர் விநியோகம் செய்து கொண்டிருந்தார், நடத்துனர், ஓட்டுனர், பயணிகள் என்று அத்தனை பேரும் மோர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தார்கள்.

போக்குவரத்துக்குத் தொந்தரவு இல்லாமல் அந்தப் பேருந்தை நிறுத்தி இருந்தார் ஓட்டுநர்.

என்ன இது? இவ்வளவு நல்ல டிரைவர் இங்க இருக்காங்க. என்று நினைத்த மதன் ஓட்டுனிடம் போய்

சார் நல்ல காரியம் பண்ணுனீங்க. சில டிரைவர்கள் ஸ்டாப்ல கூட வண்டி நிக்க மாட்டாங்க. ஆனா நீங்க மோர் கொடுக்கிறாங்கன்னு பஸ்ஸ ஓரங்கட்டி அத்தனை பயணிகளுக்கும் மோர் கிடைக்க ஏற்பாடு செய்றீங்க பாருங்க. இது பெரிய விஷயம் என்று மதன் சொல்ல

சார் வெயில் எப்படி அடிக்குது பார்த்தீங்களா ? கஷ்டம் சார். ஒடம்பெல்லாம் காெதிக்குது.

நீங்க மோர் குடிச்சீங்களா? என்று மதனை பார்த்து கேட்டார், டிரைவர்

இல்ல சார் குடிக்கல.

போங்க…. போங்க… என்று மதனை விரட்டினார்

மாேர் குடிச்சிட்டு பிளாஸ்டிக் தம்ளர பஸ்ல போடாதீங்க. எல்லாம் வெளிய போடுங்க . எல்லாரும் வந்தாச்சா? என்று மீண்டும் ஒருமுறை விசாரித்துக் கொண்டார் டிரைவர்.

பேருந்தில் நுழைந்த ஒருவரை நீங்க மோர் குடிச்சாச்சா? என்று டிரைவர் கேட்க

நான் குடிச்சிட்டேன் என்று தலையாட்டினார்.

நீங்க பண்ணது பெரிய விஷயம் சார் . பயணிகள் சார்பா நான் உங்களுக்கு நன்றி சொல்றேன் என்று மதன் சொல்ல

இதெல்லாம் பெரிய விஷயமா சார்.

ரொம்ப சூடு தம்பி. எனக்கே என்ஜின் முன்னாடி உட்கார முடியல.

சின்னச் சின்ன விஷயத்த மக்களுக்கு நல்லதா செஞ்சி தரணும். அஞ்சு நிமிஷம் பஸ்ஸ நிப்பாட்டுறதுனால. எதுவும் ஆக போறது இல்ல என்று சொல்லிய அந்த ஓட்டுனர் பேருந்தை முடுக்கினார்.

அந்த அரசுப் பேருந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படியும் சில மனுசங்க இந்த பூமியில் இருக்கத்தான் செய்றாங்க என்று சிலர் பேசிக் கொண்டார்கள். இதைப்பார்த்து சிரித்துக் கொண்டான் மதன்.

பேருந்து அந்த இடத்தை விட்டு. மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *