சென்னை, அக்.4–
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர் என்று தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும், வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டுக்கு கடந்த 25ம் தேதி இரவு காவல் துறை 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
தொண்டர்கள் ஆரவாரத்துடன்
பந்தல் கால் விழா
இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக மாநாட்டு மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி விக்னேஷ் குருக்கள் மந்திரங்கள் சொல்ல மும்மதங்கள் சார்ந்த படங்களை வைத்து மும்மதம் சார்ந்த புனித நீர் தெளித்து பூஜை நடந்தது.
கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இன்று காலை காலை 4.50 மணிக்கு மாநாட்டிற்காக சென்னை மாநாட்டு பந்தல் அமைப்பாளர் ஆனந்தன் பந்தல் காலை நட்டார். அதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதுமிருந்து, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அம்மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களிலிருந்து தீர்த்தங்கங்கள் கட்சியினரால் எடுத்து வரப்பட்டு பந்தல் கால் நடும்போது தெளிக்கப்பட்டது.
விழாவில் அதிக அளவிலான பெண்கள் கலந்துகொண்டனர். பந்தக்கால் நடும்போது, மாநில மாநாடு வல்லட்டும்..வெல்லட்டும்.. என தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பந்தல்கால் நடுவிழாவில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தியதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். மாநாடு நடைபெறும் பகுதியைச் சுற்றி ஆயிரக்கணக்கான கார்கள் நிறுத்தப்பட்டதால் மாநாட்டுப் பகுதிக்குள் செல்வதற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. அந்த பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மாநாடு நடைபெறும் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டதால் பலரும் அவதிக்குள்ளாகினர்.
தொண்டர்களுக்கு
விஜய் கடிதம்
இந்நிலையில், மாநாடு தொடர்பாக விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்த கடிதம். அதுவும் முதல் கடிதம்.
தமிழக மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும், முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான், என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.
இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம், ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.
இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.
ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர்
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள் படை, குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீடு வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர்.
எச்சரிக்கையுடன்
களமாடுவது அவசியம்
மக்கள் இயக்கமாக இருந்த நாம். மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம், அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.
இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்கு உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன்.
இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோஷத் தருணங்களை இப்போதே மன அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம்.” என்று விஜய் கூறியுள்ளார்.