புதுடெல்லி, ஜூன்.8-
சுனாமி எச்சரிக்கை அமைப்பை உருவாக்க 29 நாடுகளுக்கு இந்தியா உதவியது என்று சர்வதேச பேரிடர் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
பேரிடர் மீட்சிக்கான உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புகள் தொடர்பான 2025-ம் ஆண்டின் சர்வதேச மாநாடு பிரான்சில் 2 நாள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த பிரதமர், மாநாட்டை நடத்துவதற்கு ஆதரவளித்ததற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பெருங்கடல் மாநாட்டின் நோக்கங்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் கருப்பொருளான ‘கடலோரப் பகுதிகளுக்கு நெகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்பதை வலியுறுத்திய பிரதமர், காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும்போது கடலோர மற்றும் தீவுப்பகுதிகளின் அதிகரித்து வரும் பாதிப்பு குறித்து வலியுறுத்தினார். இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் ரெமல் புயல், கரீபியனில் பெரில் புயல், தென்கிழக்கு ஆசியாவில் யாகி புயல், அமெரிக்காவில் ஹெலீன் புயல், பிலிப்பைன்சில் உசாகி புயல் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சிடோ புயல் போன்ற சமீபத்திய உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார். இந்த சம்பவங்கள், முன் எச்சரிக்கை, பேரிடர் மேலாண்மை மற்றும் மீள்தன்மை உட்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கான அவசரத்தேவையை காட்டுவதாக குறிப்பிட்டார்.
இந்தியா எவ்வாறு மீண்டது?
1999-ம் ஆண்டு ஏற்பட்ட சூப்பர் சூறாவளி மற்றும் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி உள்ளிட்ட பெரிய இயற்கை பேரழிவுகளில் இந்தியாவின் சொந்த அனுபவங்களை பேசிய பிரதமர் மோடி, இந்தியா எவ்வாறு மீண்டது? என்பது மட்டுமல்லாமல், நீண்ட கால மீட்சிக்கான அடித்தளத்தை எப்படி அமைத்தது? என்பது பற்றியும் பேசினார்.
பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்களை நிறுவுவது பற்றி பேசிய அவர், தற்போது 29 நாடுகளுக்கு பயனளிக்கும் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியதில் இந்தியாவின் உதவியையும் நினைவு கூர்ந்தார். முக்கிய சாதனைகளாக அவை குறிப்பிடப்பட்டன. பேரிடர் தாங்கும் உட்கட்டமைப்புக்கான கூட்டணி, தற்போது 25 சிறு தீவு நாடுகளுடன் இணைந்து வலுவான வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், எரிசக்தி அமைப்புகள் மற்றும் நீர் பாதுகாப்பு தீர்வுகளை நிர்மாணித்து வருகிறது. இந்த முயற்சிகளில் முன்எச்சரிக்கை அமைப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் குறிப்பிட்டார்.
உலகளாவிய பேரிடர் மீட்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையை 5 முக்கிய முன்னுரிமைகளை அடையாளம் காண்பது. பேரிடர் பாதித்த பகுதிகள் மீட்சித்தன்மையுடன் மீண்டும் கட்டமைக்கப்பட்டதில் கற்றுக்கொண்ட பாடங்களை ஆவணப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் ஒரு உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க அவர் முன்மொழிந்தார்.