சென்னை, அக். 15–
தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
“மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர் என வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என உளறி அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதெல்லாம் செய்தி ஊடகங்களில் வெளியானது, அதனை எல்லாம் படிக்காமல் இப்போது தூங்கி எழுந்து அறிக்கை விட்டிருக்கிறார்.
அன்றைக்கு முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அந்த மாவட்டங்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள், மீட்புப் பணிகள் செய்வது தொடர்பாக ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
சாத்தானின் வேதம்
கடந்த 2015 ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்து அதனை மொத்தமாகத் திறந்துவிட்டு சென்னையை மூழ்கடித்து 289 பேர் பலியாக காரணமானவர்கள் எல்லாம் இன்றைக்குச் சாத்தான் வேதம் ஓதுவது போலப் பேசுகிறார்கள். அப்படியான எந்த நிகழ்வும் நடக்கக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் போட்டால், ‘எதற்காக ஆலோசனைக் கூட்டம்’ எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவரை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்.
6 நாள்களுக்கு முன்பு கூட மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். பொறுப்பு அமைச்சர்கள் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்கள். பேரிடர் காலத்திலும் தனக்கு விளம்பரம் கிடைக்காதா? எனக் காத்திருக்கிறார் பழனிசாமி.
‘சென்னை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை’ என பழனிசாமி கேட்டுள்ளார். கடந்த 30-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த தமிழ்நாடு முழுமைக்கான மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்” என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.