செய்திகள்

பேரிடரின் போது அவசரகால தொடர்புகளை மேம்படுத்த “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை“

இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது

சென்னை, அக்.20–

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் இன்று (20–ந் தேதி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடத்தின.

“செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.

கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

சோதனைக் காலத்தில், பொதுமக்களின் செல்போன்களில் அவசர எச்சரிக்கைகள் பெறப்படும். இந்த விழிப்பூட்டல்கள் திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்றும், உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *