சிறுகதை

பேராசை – ஆவடி ரமேஷ் குமார்

மாடிப்படியிலிருந்து கீழே விழுந்த நர்மதாவின் வயதான மாமியாரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து மாதம் மூன்று ஆகிவிட்டது.

ஒரு மாதமாக கோமாவில் இருக்கிறார்.’ இப்போதைக்கு கண் விழித்து பேச வாய்ப்பு இல்லை’ என்று சொல்லி விட்டு உதட்டை பிதுக்கினார் டாக்டர். ” நீங்க அப்படி சொல்லக்கூடாது டாக்டர்! எங்க அத்தையை எப்படியாவது காப்பாத்தி கண் விழிக்க வைங்க டாக்டர்.ப்ளீஸ்!” சட்டென்று டாக்டரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அழுதாள் நர்மதா.

ஒரு மருமகளின் பாசத்தை பார்த்து அசந்து போன டாக்டர், “கவலைப்படாதம்மா… என்னால முடிஞ்சவரைக்கும் ட்ரை பண்றேன்” என்றார். நர்மதாவின் செயலைப் பார்த்த அவளின் தோழி பரிமளாவுக்கு அதிர்ச்சி; ஆச்சரியம்!

நர்மதாவின் வீட்டுக்கருகில் குடியிருப்பதால், பரிமளா எப்போதும் நர்மதா வுடனேயே இருப்பாள்.உயிர்த்தோழி! நர்மதாவை ஒரு மருமகளாகவே மதிக்காத,நடத்தாத கொடுமைக்கார ராட்சசி அவளின் மாமியார் என்பது பரிமளாவுக்கு நன்கு தெரியும்.

அப்படிப்பட்ட ராட்சசி மாமியாரைப்போய் கட்டாயம் காப்பாற்ற சொல்லி டாக்டரின் காலில் விழுந்து அழுகிறாளே இந்த நர்மதா…. ஏன்…ஏன்..என்று குழம்பிப்போனாள் பரிமளா.

‘சரி இதை அவளிடமே கேட்டுவிடுவோம்’ என்று முடிவெடுத்த பரிமளா, ஹாஸ்பிடல் வராண்டாவிலிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த நர்மதாவை நெருங்கி நின்றாள்.

அவளின் மாமியார் மேல் அவளுக்கிருந்த அக்கறையை சுட்டிக்காட்டி உண்மையான காரணத்தை சொல்லும்படி வேண்டினாள்.

” என் மாமியார் பெரிய கொடுமைக்காரி தான் பரிமளா.அவங்களுக்கு மருமகளாகி 15 வருஷமாகியும் ஒரு பேரனையோ பேத்தியையோ நான் பெத்துக்கொடுக்க முடியாத பாவியாயிட்டேன்.

அதனால் என்னை ‘ மலடி மலடி’ னு சொந்தக்காரங்க கிட்ட , குடியிருக்கிற வீதி முழுக்க எல்லார்கிட்டயும் சொல்லிச் சொல்லி என்னை ரொம்பவும் அவமானப் படுத்தினாங்க.

அப்படி அவமானப்படுத்தின அதே வாயாலே ‘ என்னை மன்னிச்சுடு நர்மதா…நீ மலடியில்ல..’ னு சொல்ல வைக்கனும்கிறது தான் என்னோட ஆசை…பேராசை!

நானும் என் கணவரும் விடா முயற்சியா எடுத்த குழந்தைக்கான ட்ரீட்மெண்ட்டுக்கு இப்ப பலன் கிடைச்சிருக்கு.இப்ப நான் உண்டாகியி ருக்கேன். இதை என் அத்தைகிட்ட சொல்ல துடிக்கிறேன்.அதை கேட்க அவங்க கண் விழிக்கனுமே..

அதான் டாக்டர் கால்ல விழுந்து அழுதேன்” என்றாள் நர்மதா.

அவளை பரிதாபமாக பார்த்த பரிமளா, ” நிச்சயம் உன் மாமியார் கண் விழிப்பாங்க; உன் ஆசை நிறைவேறும்; கவலைப்படாதே நர்மதா” என்று அவளின் முதுகை தட்டி ஆறுதல் கூறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *