சிறுகதை

பேராசைப் பிரியர்கள் – ராஜா செல்லமுத்து

மனோஜ் வைத்துக்கொண்டு வஞ்சகம் இல்லாமல் செலவு செய்யும் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன்.

அவன் இயல்பை ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. தன் கையில் பணம் இருந்தால் தாராளமாகச் செலவு செய்வான். இல்லையென்றால் அமைதியாக இருப்பான்.

மனோஜின் மனதை மாற்றியவர்கள் ஏராளம். அதெல்லாம் தனக்குத்தானே சொல்லிச் சிரித்துக் கொள்வான் வெளியே அதை வெளிப்படையாக அவன் யாரிடமும் சொன்னதில்லை.

அப்படி என்னதான் நடந்தது என்று அவனுடைய நண்பன் சுரேஷ் கேட்டபோது

மனோஜ் ஒன்னு இரண்டா சொல்லி முடிக்க ? எழுதுவதற்கு எழுத்தும் தீராது. சொல்வதற்கு வார்த்தையும் பத்தாது என்று கவிதையாகவே பதில் சொன்னான்.

காரணம் அவன் மனம் காயம் பட்டிருந்தது என்பது மட்டும் உண்மை.அது சுரேஷுக்கு தெரிந்திருந்தது.

சரி சொல்லு ஏன் இப்படி முன்ன விட ரொம்ப ஒரு மாதிரியா இருக்க ? எது இருக்குனாலும் இப்ப இல்லன்னு சொல்ற. முதல்ல நீ அப்படி இல்லையே? என்று சுரேஷ் கேட்டபோது

ஆமா சுரேஷ் என்னுடைய இயல்ப நிறைய பேர் மாத்திட்டாங்க . அது தப்புன்னு இப்பதான் எனக்கு தெரிய வருது.

ஆனா நான் முதல்ல அப்படி நினைக்கல .என்கிட்ட என்ன இருக்கோ அதச் செய்வேன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நலிந்த நண்பன் என்கிட்ட வந்தான். அவன் பேரு கிருஷ்ணா அவனுடைய டிரஸ், உடல்வாகுது எல்லாம் பார்த்து ரொம்ப வறுமையில் இருக்கான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அவனுக்காக அவன் கேட்காமலே சில உதவிகளை செஞ்சேன். உடை, உணவு, செலவுக்கு பணம்னு எல்லாம் செஞ்சேன் .அதுதான் நான் பண்ண தப்பு போல . நம்ம கேட்காமலே மனோஜ் செய்றானேன்னு கிருஷ்ணா கேட்க ஆரம்பித்தான். நானும் கொடுக்க ஆரம்பித்தேன் .

முதன்முதலா கேக்குறதுக்கு கூச்சப்பட்ட கிருஷ்ணா, இப்போ எல்லாம் ரொம்ப தாராளமா கேட்க ஆரம்பிச்சிட்டான். என்கிட்ட பணம் இல்லங்கிறது. அவனுக்கு புரியல. நானும் எவ்வளவோ கொடுத்து பார்த்தேன் . கொடுத்த பணம் திரும்ப வரல. இனிமே கொடுக்கக் கூடாது என்று முடிவு பண்ணிட்டேன்.

ஆனா அவன் என் கூட பேசறது நிப்பாட்டிட்டான். நானும் திருப்பி பேசல பணத்தையும் கொடுத்து பகையும் சம்பாதிக்கணுமா? அப்படி நினைத்துட்டு விட்டுட்டேன்.

அதுக்கப்புறம் இன்னொருத்தன் ; அவனும் இதே மாதிரி: நம்ம கூட இருக்கிறவங்க காபி வாங்கிக் குடுத்தாலாே இல்ல சாப்பாடு வாங்கி கொடுத்தாலோ ? எதுவுமே இல்லாத மாதிரி காமிக்காம இருக்கிறது மாதிரி நம்ம கிட்ட பணம் இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டா அதத் தவறாக புரிஞ்சிட்டு மேலும் மேலும் கடன் கேக்குறாங்க.

அது பெரிய தப்பு . அதனால தான் இப்ப நான் நண்பர்கள் கூட அதிகம் சேர்றதில்லை என்று சுரேஷ்டம் விளக்கமாகச் சொன்னான் மனோஜ் .

அப்போது என்ன மனோஜ்? எப்படி இருக்கீங்க? ஆளையே பார்க்க முடியல என்று ஒருவன் பணத்துக்கு அடி போட்டு நின்று கொண்டிருந்தபோது சுரேஷும் மனோஜ் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

திரும்பிப் பார்க்காமல் இடத்தைக் காலி செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *