செய்திகள்

பேராசிரியர்கள் பணி முறைகேடு சம்பவம்: தவறு செய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை

Makkal Kural Official

சென்னை, ஜூலை 29-–

பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டு உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியர்கள் சிலர், பல கல்லூரிகளில் பணியாற்றியது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வரும் வாரத்தில் இந்த குழுவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரிக்கவும், ஒரு வாரத்துக்குள் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் திட்டமிட்டு வருவதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். அதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை அறிக்கையை அண்ணா பல்கலைக்கழகமும் கொடுத்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கவர்னர் ஆர். என்.ரவி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரத்தில் தொடர்புடைய கல்லூரிகள் தவறு செய்து இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். தவறு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் போன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தனியார் அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி பேராசிரியர்கள் போலியாக பணியில் சேர்ந்ததை கண்டுபிடித்தோம். அந்த தனியார் அமைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’

மோசடியில் ஈடுபடுபவர்களில் சிலர் என்னிடம் இருந்து வந்தது போல வாட்ஸ்-அப் செய்திகளை அனுப்புகிறார்கள்.

மேலும் என்னுடைய பெயர், புகைப்படம், போலி மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற செய்தி, மின்னஞ்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு பதில் அளிக்காமல் அவர்களை பற்றி புகாரளிக்கலாம்’ என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, ‘நான் துணைவேந்தராக இருந்த காலத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது. அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதோடு, சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சதவீதமும் குறைக்கப்பட்டது. இதுசார்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பல்கலைக்கழகத்தின் உத்தரவை உறுதி செய்தது’ என்று சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *