சிறுகதை

பேப்பர் – ராஜா செல்லமுத்து

பனிவிழும் அதிகாலையில் தன் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டுபோய் ஒவ்வொரு வீடாகப் பேப்பர் போடுவார் ஜெகன்.

அவர் ஒருபோதும் தன்னுடைய வேலையை நிறுத்துவதில்லை; விடுமுறை எடுத்துக் கொண்டு கூட யாரையாவது அனுப்பலாம் என்று நினைத்தால் அன்றைக்கு சம்பளம் போய்விடும் என்று வேலைக்கு கிளம்பி விடுவார் ஜெகன் .

அவருக்கு குடும்பம் குழந்தைகள் என்று இருக்கிறார்கள் வெயில், மழை, புயல் எதுவாக இருந்தாலும் அதிகாலைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பேப்பர் போடும் வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு தயாராகி கிளம்பி விடுவார் ஜெகன்.

ஒரு நாள் எல்லோருக்கும் 24 மணி நேரம் என்றால் ஜெகனுக்கு மட்டும் 48 மணி நேரம் போல உழைத்துக் கொண்டே இருப்பார் .அப்படி ஒரு உழைப்பாளி அவர்.

மனைவி தன் ரெண்டு பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டும் என்ற அக்கறை சுய கௌரவம், எல்லாம் ஜெகனுக்கு ஒட்டிக் கொண்டதால் தன் உடல்நிலை சரியில்லை என்றால் கூட வேலைக்கு கிளம்பி விடுவார்

உடம்பு சுட்டுக்கெடக்கு; இன்னைக்கு ஒரு நாளாவது பேப்பர் போடாம வீட்ல இருக்கலாமே ?என்று மனைவி எச்சரித்தாலும்

முடியாது ஒரு நாள் லீவு போட்டோம்னா சம்பளம் வராது; உடம்பு முடியலன்னு படுத்தா அஞ்சு நாளைக்கு எந்திரிக்க முடியாது. அதனால இதெல்லாம் பார்க்கக்கூடாது; புள்ள சட்டுப் புட்டுன்னு வேலைக்கு போயிட்டே இருக்கணும் என்று தன் உடல்நிலை மறந்து கூட தன் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பார் ஜெகன்.

அவர் எப்போதும் எல்லா வீட்டிலும் பேப்பர் போட்டுவிட்டு ஒரே ஒரு பலசரக்கு கடையில் மட்டும் நின்று பேசுவார் . பலசரக்கு கடை ஓனரின் பெயர் அருள்.

அருள் கடை தான் பேப்பர் போடுவதில் கடைசியாக இருக்கும்.

அன்று நடந்த நிகழ்வுகள் , குடும்பம் என்று அவர்களிடம் பேசி விட்டுட்டு தான் செல்வார் ஜெகன் .

தினமும் இதுவே நடந்து வாடிக்கையாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் அருளும் ஜெகனும் நண்பர்களாகக் கூட மாறிப் போனார்கள் .

சில நாட்கள் அருள் கடை அடைத்துப் போட்டு வெளியில் செல்ல வேண்டி இருந்தது. செய்தித்தாள்களும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஊரில் கோயில் திருவிழாவுக்கு சென்றார்.

திருவிழாவை முடித்து சில நாட்கள் ஊரில் இருந்து விட்டு மறுபடியும் வீட்டிற்கு வந்து கடையைத் திறந்தார் அருள் .

அந்த அதிகாலை ஜெகன் பேப்பர் கொண்டு வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்; வரவில்லை .ஒருவேளை இன்னும் நாம் ஊரில் இருந்து வரவில்லை என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ? அதுதான் வரவில்லை என்று நினைத்து அருள் பக்கத்து வீட்டில் அந்த செய்தித் தாளை வாங்கி படித்தார்.

எப்போது போல அரசியல் ,சினிமா ,நாட்டின் நிலவரங்கள் அத்தனையும் வாசித்துவிட்டு, தினமும் இந்த நாட்டில் தான் நடந்துகிட்டு இருக்கு புதுசா ஒன்னும் இந்த பூமியில் ஏதும் பூக்கப் பாேறதில்லை என்று சலித்துக் கொண்டு கடையில் வியாபாரத்தை கவனித்தார் அருள்

அன்றைய செய்தித்தாளைப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்த அவருக்கு ஏன் இன்று ஜெகன் வரவில்லை? செய்தித்தாள் போடவில்லை ?என்று உடனே ஜெகனுக்கு போன் செய்தார் .அவரின் மனைவி எதிர் திசையில் இருந்து பேசிய பேச்சு அவருக்கு வேதனையை தந்தது.

ஐயா அவர் தவறிட்டாருங்க, இரண்டு நாள் ஆச்சு எவ்வளவு சொல்லிப் பார்த்தோம் .ராத்திரி பகலா உழைச்சாரு. உடம்ப கெடுத்துட்டாரு. இன்னைக்கு அவர் இல்லாம நாங்க கஷ்டப்படுறோம் என்று வருத்தத்துடன் புலம்பினாள். ஜெகனின் மனைவி,

அடப் பாவமே தினந்தோறும் உலகத்தில் நடக்கிறது எல்லாம் அச்சு அடிச்சு விக்கிற செய்தித்தாளகொண்டு வந்து கொடுக்கிற ஜெகன் இறந்த செய்தி ஒரு வார்த்தை கூட எந்த பேப்பர்ல யார் வரலைய? என்று அன்றே செய்தித்தாளையும் பழைய செய்தித்தாள்களை எல்லாம் புரட்டிப் பார்த்தார் எதிலும் ஜெகன் பெயர் வரவில்லை.

இவ்வளவு நாள், அந்த செய்தித்தாளை போட்டவனுடைய பெயர் இந்த செய்தித்தாள்ல போடலையே ?என்னென்னமோ செய்தி இருக்கு. ஜெகனுடைய பெயர் இல்லையே என்று வருத்தப்பட்டார் அருள்,

அன்றைய செய்தித்தாளை வாசித்தார். ஜெகன் பற்றிய நினைவுகளும் அவருடன் பேசியது மட்டுமே செய்தித்தாள் முழுவதும் நிறைந்து கிடந்தன.

அந்த செய்தித்தாளில் அச்சடிக்கப்பட்ட செய்தி ஒன்று கூட அருள் மனதில் ஒட்டவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *