அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

பேச்சிலர் அறை – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

சென்னை நகரத்தில் வேலை கிடைத்து கிராமத்தில் இருந்து நகரம் வந்த சுரேந்தருக்கு சென்னை நகரம் அந்நியமாகப்பட்டது .

அவனுக்கு தெரிந்த ஆட்கள் சென்னையில் இல்லை என்பதால் கிடைத்த வேலையை விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் எப்படியாவது சென்னையில் தங்கிக் கிடைத்த வேலையைச் செய்து சம்பாதித்து விட்டு தான் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தான் சுரேந்தர் .

சென்னையில் வேலை கிடைப்பது எளிதாக இருந்தது. ஆனால் அவனுக்கான அறை கிடைப்பது தான் ரொம்பச் சிரமமாக இருந்தது.

எந்த வீட்டிற்குச் சென்றாலும் ஏதாவது ஒரு நிபந்தனையை இட்டுக் கொண்டே இருந்தார்கள்.

” நீங்க பேச்சுலரா ? “என்ற கேள்விக்கு

“ஆமா” என்று பதில் சொன்னான் சுரேந்தர். அப்படி பதில் சொன்ன அடுத்த நிமிடமே திறக்கப்பட்ட கதவுகள் பட்டென்று அடைக்கப்பட்டன. பேச்சிலர் என்றால் என்ன ஏதாவது பிரச்சனையா? இங்கே பேச்சிலரா இருக்கிறவங்க, கொலைகாரனா , கொள்ளைக்காரனா ஏதோ தவறு செய்தவனா சித்தரிக்கப்படுறாங்களே ? தனி ஆளா இருக்கிறது தப்பா? என்று அவனுக்கு அவனே கேள்வி கேட்டுக் கொண்டுச் சில பல வீடுகளில் ஏறி இறங்கினான்.

ஒரு சில இடங்களில் பேச்சிலர் அறை கிடைத்தாலும் அங்கே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருந்தன. ஏழு மணிக்கு மேல் வீட்டிற்கு யாரும் உன்னைப் பார்க்க வரக்கூடாது. தேவை இல்லாம சத்தமா பேசக்கூடாது. சுவர்ல ஆணி அடிக்கக் கூடாது. நைட்டு பத்து மணிக்கு மேல லைட் எரியக் கூடாது. தண்ணிய அளவா செலவழிக்கணும். எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வரலன்னா கேட்ட அடைச்சிடுவோம். தம்மு, தண்ணி, அசைவம் அறவே கூடாது. இதுக்கு சம்மதமா? என்று கேட்ட வீடுகளைப் பார்த்து தலைதெறிக்க ஓடினான் சுரேந்தர்.

” என்னடா இது? அப்படி போனா இப்படி இருக்கு. இப்படி வந்தா அப்படி இருக்கு .என்ன செய்வது? என்று புலம்பிக்கொண்டே வீடு தேடினான். அவனுக்குத் தகுந்தது மாதிரியான அறைகள் எங்கும் கிடைக்கவே இல்லை. ஆண்கள் தங்கும் விடுதியில் தங்கிப் பார்க்கலாம் என்று அங்கே சென்றான் . அது கழுதைக் கொட்டமாகக் கிடந்தது. அங்கே இருந்தால் அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொள்ளலாம் என்ற விதியும் சுத்தம் என்ற சொல்லும் அங்கே அசுத்தமாக இருந்தது. இங்கே தங்குவதற்கு பேசாம கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில படுத்துக்கிரலாம் பாேல ” என்று மூச்சிரைக்க அந்த இடத்தை விட்டு ஓடி வந்தான் சுரேந்தர்.

வாடகை வீடுகளைக் காட்டும் புரோக்கரிடம் சொன்னால் ஒரு மாத வாடகைப் பணத்தை வீட்டைக் காட்டிய குற்றத்திற்காக அவனுக்கு தண்டம் கட்ட வேண்டும் என்று தினமும் நடையாக நடந்து கொண்டிருந்தான். பேச்சிலர் (தனியாள் ) அறை கிடைக்கவே இல்லை.

“இந்தா பாருங்க தம்பி. பேச்சிலர் எல்லாம் அப்படி இப்படின்னு இருப்பாங்க . பக்கத்துல குடும்பம் குட்டி எல்லாம் இருக்குது. ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிரும். இங்க இருக்கிற பேச்சிலர்களுக்கு நல்ல மரியாதை இல்லை” என்று ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.

” இவனுக வீடு கொடுக்கிறதுக்கு நாம கல்யாணம் பண்ணிட்டு வரணும் போல .இது என்ன கொடுமையா இருக்கு? என்று கொஞ்சம் கடுப்பாகி எல்லா இடங்களிலும் வீடு தேடிக் கடைசியில் ஒரு வீட்டை கண்டுபிடித்தான். சுரேந்தர்.

விதிமுறைகளைச் சொல்லி அந்த வீட்டுக்காரர் சுரேந்தரைக் குடியேற்றினார்.

” தம்பி பக்கத்துல, கீழ இருக்கிறவங்க எல்லாரும் குடும்பமா இருக்காங்க. பாத்து நடந்துக்கணும் .பொம்பள புள்ளைங்க எல்லாம் இருக்கிறாங்க. ஏதாவது தப்பு தண்டான்னு கேள்விப்பட்டா அடுத்த நிமிஷம் நீங்க வீட்டைக் காலி பண்ணிடனும் சரியா?” என்று சுரேந்தரிடம் சட்ட திட்டங்களை சொல்லி வீட்டுச் சாவியைக் கொடுத்தார், அந்த வீட்டின் உரிமையாளர்.

” இந்த வீடாவது கிடைத்ததே? ” என்று வீட்டைத் திறந்து பார்த்தபோது அந்த அறை அசுத்தத்தின் உச்சமாக இருந்தது.

” சரி கிடைச்சது நல்லது ” என்று வீட்டைச் சுத்தம் செய்து பால் காய்ச்சி குடியேறினான். அக்கம்பக்கத்தில் இருந்த குடும்பங்கள் எல்லாம் சுரேந்தரிடம் நன்றாகப் பேசினார்கள். ஆனால் எதுவும் இதயம் வரை செல்லவில்லை. உதட்டளவில் மட்டுமே இருந்தார்கள். இரண்டு ஒரு நாட்களில் சுரேந்தர் வீட்டுக்கு அருகிலும் கீழேயும் இருந்த வீடுகளுக்கு போலீஸ்காரர்கள் வந்தார்கள்

” என்ன இது? நம்ம வீட்டுக்கு போலீஸ்காரன்க வந்திருக்காங்களே ? என்று பார்த்தபோது,

சுரேந்திரிடம் வந்த ஒரு போலீஸ்காரர்

” தம்பி நீ எங்க குடி இருக்க?

” சார் நான் மேல பேச்சிலர் ரூம்ல இருக்கேன். நான் பேச்சிலர் ” என்று சுரேந்தர் சொன்ன போது,

“ஓ ..! நீ பேச்சிலரா? அப்ப உன்ன ஒன்னும் விசாரிக்கல .இந்த கீழ் வீட்டுல மேல் வீட்டுல குடும்பம் இருந்தாங்களே அவங்க எல்லாம் எங்க ? “

என்று கேட்டபோது

” எனக்கு தெரியாது சார் .ஏதோ பேசுவாங்க. அவ்வளவுதான் தெரியும் .மத்தபடி அவங்களப் பத்தி முழு விவரம் எனக்குத் தெரியாது. நான் இப்பதான் இந்த வீட்டுக்கு குடி வந்தேன் ” என்று சுரேந்தர் சொல்லிக்கொண்டு ஒதுங்க.

” சரி நீ உன் ரூமுக்கு போ” என்று அவனைப் போகச் சொல்லிவிட்டு, அங்கேயே அமர்ந்தார்கள் காவலர்கள். குடும்பமாக குடியேறிய அந்த நபர்கள் எல்லாம் சிறிது நேரத்திறிகெல்லாம் வீட்டிற்கு வந்தார்கள். காத்திருந்து அவர்களை மடக்கிய காவல்துறையினர்

” உன் பெயர் என்ன ? என்று ஒரு ஆணிடம் கேட்க

அந்த குடும்பத்தாள் தன் பெயரைச் சொன்னான்.

” உன் கூட இருக்கிற இந்த பொண்ணு, உன்னோட மனைவியா?

என்று போலீஸ் கேட்க திருதிருவென விழித்தான் அந்த ஆண்

” சொல்லு உன் மனைவியா?

” ஆமா “

” உன்னோட ஆதார் கார்டு கொடு.

என்று அந்த ஆணிடம் கேட்க அவன் தன் ஆதார் கார்டைக் கொடுத்தான். அந்தப் பெண்ணின் ஆதார் கார்டையும் வாங்கி இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இரண்டும் வெவ்வேறாக இருந்தன.

” இங்க இரண்டு பொண்ணுங்க தங்கி இருக்காங்களே? அவங்க யாரு?

என்று போலீஸ்காரர்கள் கேட்க

அதற்கும் அந்த ஆண் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.

” என்னுடைய பிள்ளைகள் என்றான்.

” அப்படியா அவங்க ஆதார் கார்டுகள குடு” என்றதும் இரண்டு பெண்களும் தங்களுடைய ஆதார் கார்டுகளைக் கொடுத்தார்கள்.

அத்தனை ஆதார் கார்டுகளும் வெவ்வேறாக இருந்தன.

” உண்மையை சொல்லு. நீ யார்? இந்தப் பொண்ணுங்க யார்? “என்று கேட்டபோது

அந்த ஆண் அத்தனையும் கக்கினான்.

” சார் , நான் ஒரு புரோக்கர். இந்த பொண்ணும் புரோக்கர். இந்த ரெண்டு பெண்களை வச்சு நாங்க வேற மாதிரியான தொழில் பண்ணிக்கிட்டு இருக்கோம். இந்த வீட்டுக்கு வரும் போது நாங்க கணவன், மனைவி , இவங்க இரண்டு பேரும் என்னுடைய பொண்ணுங்கன்னு சொல்லித் தான் குடி வந்தாேம். எங்களை ஒரே குடும்பம்னு நெனச்சு வீடு கொடுத்துட்டாங்க. ஆனா நாங்க செய்ற தொழிலே வேற சார். இங்க இருக்கிறவங்களுக்கு நாங்க ஒரே குடும்பத்துக்காரங்கன்னு நினைக்கிறாங்க. ஆனா நாங்க செய்ற வேலை வேற. இது யாருக்கும் தெரியாது. வெளியில தான் அத்தனையும் வச்சிக்கிருவோம். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்துருவோம். இப்படித்தான் நாங்க ஒரே குடும்பம் மாதிரி வாழ்ந்துட்டு இருக்காேம். நாங்க மட்டும் இல்ல சார் கீழ இருக்கிற வீட்டுக்காரன்க கூட உண்மையான குடும்பம் இல்ல. அவங்களும் எங்கள மாதிரி தான் வேற தொழில் காரங்க ” என்று தான் மாட்டியது மட்டுமல்லாமல் அவர்களையும் மாட்டி விட்டான் அந்த ஆண் .

போலீஸ்காரர்கள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, கீழே இருந்த வீட்டுக்காரர்கள் தப்பிக்க முயன்ற போது, அவர்களை மடக்கி பிடித்தார்கள் காவல் துறையினர்.

” ஏன்டா நீங்க எல்லாம் குடும்பம்ங்கிற பேர்ல வீட்ட வாடகைக்கு எடுத்துட்டு, தப்பான தொழில் செஞ்சுகிட்டு இருக்கீங்க. ஆனா, ஒரு பேச்சிலரா இருக்கிறவன், கஷ்டப்பட்டு வீடு கேட்டா, அவனுக்கு வீடு இல்ல.அவன் தப்பானவன்னு சித்தரிச்சு ,அவனுகளுக்கு வீடு இல்லைன்னு துரத்தி விடுறது . வெளியுலகத்துக்கு நீங்க குடும்பம் மாதிரி தெரியுறீங்க .ஆனா உள்ள நுழைஞ்சு பாத்தாத் தான் அவ்வளவும் சாக்கடைன்னு தெரியுது “என்று அவர்களை நையப்புடைத்து போலீஸ் வண்டியில் ஏற்றினார்கள் காவல்துறையினர்.வீட்டின் உரிமையாளர்களுக்கும் சில டோஸ்களைக் கொடுத்தார்கள் காவல்துறையினர்.

“அய்யய்யோ ,இது என்ன இவ்வளவு பிரச்சினையா இருக்கு? குடும்பமா இருக்கிறவங்கள வாடகைக்கு வைக்கலாம்னு பாத்தா, இது ஒரே கூத்தாவுல இருக்கு. எவன நம்புறதுன்னு தெரியல சாமி ” என்று புலம்பினார் வீட்டின் உரிமையாளர்கள் .

இனிமேல் குடும்பஸ்தர்களுக்கு வீடு கிடையாது. பேச்சிலர்களுக்கு மட்டுமே வீடு கொடுக்கப்படும் என்று காலியான வீடுகளில் எல்லாம் எழுதப்பட்ட அட்டை தொங்கின.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுரேந்தர் தன் தனியாள் அறையில் இருந்து சத்தமாகச் சிரித்தான்.

இதற்கு முன்னால் அவன் சத்தமாகப் பேசினாலோ சிரித்தாலோ எதற்காக இப்படி பேசுகிறாய்? எதற்காக இப்படி சிரிக்கிறாய்? என்று கேட்கும் அந்த வீட்டின் உரிமையாளர் .இப்போது எதுவும் கேட்கவில்லை .

“பேச்சிலர்னாலே நமக்கு எந்தப் பிரச்சனையும் வரப் பாேறது இல்ல. சத்தமா பேசி, சிரிச்சா சிரிச்சிட்டு போகட்டும் “என்று நினைத்துக் காெண்டார், அந்த வீட்டின் உரிமையாளர்.

பேச்சிலர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவது, அதுவும் தனியாள் அறைகளாக விடுவது தான் சிறந்தது என்று முடிவெடுத்தார்கள் வீட்டின் உரிமையாளர்கள் .

Loading

One Reply to “பேச்சிலர் அறை – ராஜா செல்லமுத்து

  1. பேச்சிலர் அறை: சார் நீங்க எங்கேயோ
    போய்ட்டீங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமான கரு.
    பாரதிராஜன்என்கிற் ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *