இரவு சமைப்பதற்காக இன்டக்சன் ஸ்டவ்வை கனெக்சன் கொடுத்தான் ஜெயக்குமார்.
அம்மா பேசியதை இப்போது நினைத்தாலும் ஜெயக்குமாருக்கு சிரிப்புதான் வரும்.
சென்னைக்கு வந்து வருடங்கள் பல ஓடியிருந்தாலும் இன்னும் திருமணம் ஆகாமல் ஒண்டிக்கட்டையாகவே குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவனுக்கு அம்மாவின் குரல் கேட்கும் போதெல்லாம் அவள் பேசியது ஞாபகத்துக்கு வரும் .
அம்மா எப்போது ஃபோன் செய்து குசலம் விசாரித்தாலும்
டேய் ஜெயக்குமாரு சீக்கிரம் ஒரு கால் கட்ட போடுறா. தன்னந்தனியா இப்படியே கெடந்து நீ கஷ்டப்படணுமா? உன் கூட பிறந்தவங்க எல்லாம் கல்யாணம் காட்சி முடிச்சு புள்ள குட்டிக கூட இருக்கும்போது நீ மட்டும் தனியா இருக்கிறது. அம்மா மனசு கஷ்டமா இருக்கு. ஒன்னையும் கண்ணழகு பாத்துட்டேன்னா நான் சந்தோஷமா கண்ண மூடிடுவேன்
என்று ஒவ்வொரு முறை போன் செய்யும்போதும் ஜெயக்குமாரின் அம்மா பேசுவதை கேட்டு கேட்டு அவனுக்கு காது நிறைந்து போயிருக்கும்.
அம்மா கல்யாணம் எல்லாம் நாம நினைக்கிறது மாதிரி இல்ல. நான் எவ்வளவோ பேரப் பாத்து இருக்கேன். பேசி இருக்கேன். ஆனா எதுவுமே அமையல; கல்யாணங்கறது ஏதாே சொல்லுவாங்களே மலை நாத்தங் காய்க்கும் கடல் உப்புக்கும் என்ன சம்பந்தம். அது ரெண்டும் ஒன்னு சேரலையான்னு. அது மாதிரிதாம்மா கல்யாணம்ங்கிறது.
நான் இப்படி இருக்கணும்னு எனக்கு ஆசை இல்ல .ஆனா எல்லாமே நழுவிப் போகுது. முன்னமே எழுதி வைக்கப்பட்ட ஒன்னுதான் கல்யாணம்மா. எனக்குன்னு எழுதி வச்சிருக்கிற பொண்ணு கண்டிப்பா இருப்பாங்க. அதுவரைக்கும் நான் காத்துட்டு தான் இருக்கணும்
என்று அம்மாவின் கேள்விக்குப் பதில் சொன்னான் ஜெயக்குமார்.
நீ சொல்றதும் சரிதான். கம்பு கூட்டு முடி நரைக்கிற வரைக்கும் அப்படியே இருந்தா சரி வருமா என்ன? சட்டுபுட்டுன்னு ஒரு பொண்ணப் பாத்துக் கல்யாணம் முடிக்கப் பாரு.
என்று கிராமத்தில் இருக்கும் தாய் சென்னையில் வசிக்கும் ஜெயக்குமாரைக் கேட்டுக் கொண்டே இருப்பாள்.
அம்மா எனக்கு என்ன குறைச்சல் நல்லா தான் இருக்கேன். நல்லா சம்பாதிக்கிறேன். நானே சமைச்சு சாப்பிடுறேன். இந்த வாழ்க்கை எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கும்மா. கல்யாணம் அப்படி இப்படின்னு புள்ள குட்டி வந்தா அத வச்சு இழுத்துட்டு என்னமோ எனக்கு அது பிடிக்கல. இப்படி இருக்கிறது தான் சுகம்னு எனக்கு தோணுது
என்று அம்மாவிடம் மறுபடியும் ஜெயக்குமார் வாதிட
நல்லா இருக்குடா உன் பேச்சு. கல்யாணம் ஆனா தாண்டா நீ முழு மனுஷன். கல்யாணம் ஆகாதவன் அரை மனுஷன்தான். நீ எவ்வளவு சம்பாரிச்சாலும் சாதிச்சாலும் ஒருபிரயோசனம் இல்ல. முழு மனுசனாகு. மத்த பசங்களுடைய பேரன் பேத்திகள கொஞ்சுனது மாதிரி உன் பேரன் பேத்திகள நான் கொஞ்ச வேண்டாமா? கிறுக்குப் பயலே..
என்று மறுபடியும் ஜெயக்குமாருக்கு ஒத்தடம் கொடுத்தாள் அம்மா.
சரிம்மா பாப்போம்.
என்று நழுவிய வார்த்தைகளை அவிழ விட்டான் ஜெயக்குமார்.
ஆயிரம் நீ சம்பாதித்தாலும் பாெண்டு பாெருசு வீட்டுக்குள்ள இருக்கிற மாதிரி வராதுடா. ஒரு பொம்பள வீடு கூட்டி, வாசத் தாெளிச்சு கோலம் போட்டு, அடுப்புப் பத்த வச்சு, சமைச்சுப் போடுற சங்கதியே ஒரு அலாதி மகிழ்ச்சிடா
என்று மறுபடியும் பொருமினாள் அம்மா.
உனக்கென்ன வீட்டில ஒரு பொம்பள பேசணும். அவ்வளவு தானே? அதுக்கு ஏற்பாடு பண்றேன்.
என்று நக்கல் கலந்து சிரித்தபடியே சொன்னான் ஜெயக்குமார்.
நான் சொன்னது வேற. நீ சொல்றது வேற. வீட்ல பொண்ணோட கொலு சத்தம் கேட்கணும். பேச்சு சத்தம் கேட்கணுமடா. அப்படி பேசினா தான் வீட்டுக்கு நல்லது
என்று மறுபடியும் ஜெயகுமாருக்கு போதித்தாள் அம்மா
இப்ப என்ன உனக்கு பொம்பள பேசணும்? அதானே அதுக்கு ஏற்பாடு பண்றேன்
என்று சொன்ன ஜெயக்குமார் நினைவில் அம்மா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஒரு நாள் இன்டக்சன் ஸ்டவ் வாங்குவதற்காக கடைக்குப் போயிருந்தான்.
இது எவ்வளவு சார்? என்று ஒரு இன்டக்சன் ஸ்டவ்வை கடைக்காரரிடம் கேட்க
இந்த ஸ்டவ் 5000 .அது 4000 .இந்த ஸ்டவ் 6 ஆயிரம்
என்று ஒவ்வொரு இன்டக்சன் ஸ்டவ்வையும் காட்டிக் கொண்டிருந்தார் கடைக்காரர்.
விலை உயர்ந்த ஒரு ஸ்டவ்வைக் காட்டி
இது எவ்வளவு? என்று ஜெயக்குமார் கேட்டபோது
இது 6 ஆயிரம்
என்றார் கடைக்காரர் .
இதுல அப்படி என்ன விசேஷம்? என்று ஜெயக்குமார் கடைக்காரரிடம் எதிர் கேள்வி கேட்டான்.
நீங்க பேச்சலர் தான, வீட்டுக்கு வாங்கிட்டு போய் , இந்த அடுப்ப கனெக்சன் குடுத்துப் பாருங்க. அப்பத் தெரியும் இதனுடைய மகிமை என்றான் கடைக்காரன்.
சொன்னது போலவே அந்த அடுப்பை வாங்கி வந்து, வீட்டில் எலக்ட்ரிக் கனெக்சன் கொடுத்து எரிய வைக்கும் போது தான் தெரிந்தது கடைக்காரர் சொன்னது உண்மை என்று .
அந்த இன்டக்சன் ஸ்டவ்வில் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது:
எவ்வளவு வெப்பத்தில் வைக்க வேண்டும். அரிசி பொங்குவதற்கு குழம்பு வைப்பதற்கு .தண்ணீர் காய வைப்பதற்கு. ரவை செய்வதற்கு
என்று வகைப்படுத்தி அந்த பெண்ணின் குரல் வந்தது.
இந்தக் குரல்களை எல்லாம் கேட்ட ஜெயக்குமாருக்குச் சிரிப்புதான் வந்தது .
அப்போது அம்மாவுக்கு போன் செய்தான்.
அம்மா வீட்ல ஒரு பெண் குரல் கேட்கிறது நல்லதுன்னு சொன்னேன்ல. இந்தா பாரு. ஒரு பெண் குரல் கேக்குது. கேளு
என்று இன்டக்சன் ஸ்டவ்வில் இருந்து வரும் குரலை அம்மாவின் காதில் பரவ விட்டான்.
டேய் என்னடா நான் சொன்னது மாதிரியே எவளையாவது இழுத்துட்டு வந்துட்டியா? நான் ஒன்னைய கல்யாணம் தான் முடிக்க சொன்னேன். உன்னை யாரு கூடவோ திருட்டுத்தனமா வாழச் சொல்லல. யார் அந்தச் சிறுக்கி அவள வீட்ட விட்டு வெளியே போகச் சொல்லு. வீட்டுக்கு வந்தேன்னா குடுமிய அறுத்துப்புடுவேன் என்று கிராமத்து பாசையில் பேசினாள் அம்மா.
ஜெயக்குமார் கடகடவென சிரித்தான்.
அம்மா அது உண்மையான பெண் இல்ல. எலக்ட்ரிக் இன்டக்சன் ஸ்டவ் .அதுல இருந்து வர்ற குரல்
என்றபோது
என்னடா கூத்தா இருக்கு.ஸ்டவ்ல பெண் குரலா ?.
என்று அம்மா வியந்தாள்
ஆமாம்மா நீ தான சொல்லுவ வீட்டில ஒரு பெண் குரல் கேட்கணும்னு. அதான் இந்த ஸ்டவ் வாங்கிட்டேன். இப்போ உனக்கு சந்தோஷமா?
என்ற போது
டேய் என்ன கோவத்த கிளப்பாத என்று கத்தினாள் அம்மா.
கட கட சிரித்தான் ஜெயக்குமார்.
.உலை கொதித்து விட்டது அரிசியை போடவும்
என்ற பெண்குரல் அந்த ஸ்டவ்விலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது.