நாடும் நடப்பும்

பெரும் தொற்று சவால்களை சிறப்பாக சமாளிக்கும் ஸ்டாலின்

நோய்களை ஒழிக்க ஆராய்ச்சிகளே நல்ல ஆயுதம்

கொரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலை நாடெங்கும் புயலாய் வீசியதில் தினசரி பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பலமுறை 4 லட்சத்தையும் தாண்டியது. தொடர்ந்து கிட்டத்தட்ட 30 நாட்களாக 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பு மெல்லக் குறைந்து வருவது நிம்மதிப் பெரு மூச்சு விட வைக்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் குறைந்து வந்த பாதிப்பு பிப்ரவரி மாதத்தில் 10,000 பேருக்கும் குறைவாகத்தான் பதிவானது. ஆனால் மார்ச் மாத இறுதியில் அதிகரிக்க துவங்கி மே முதல் வாரத்தில் உச்சமாக 4 லட்சத்தையும் தாண்டியது.

ஆனால் தொடர் கண்காணிப்பிலும் நாடு தழுவிய ஊரடங்கு ஏற்பாடுகளாலும் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வரத் துவங்கி விட்டது.

இப்படியே குறைந்து விட்டால் நல்லது தான். கடந்த சில வாரங்களாக 60 வயதுக்கும் குறைவானோர் பலர் இக்கொடிய நோயின் தீவிரத்தால் இறந்தும் விட்டனர்.

2 ம் அலையின் கோர தாண்டவத்தில் 40 வயதுக்குட்பட்டோர் பலரும் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் சிலர் இறந்து போனார்கள்.

கடந்த வார இறுதி நாளில் மட்டும் 50 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் இறந்தும் உள்ளனர். இப்படியாக பறிபோகும் படித்தவர்கள், நிபுணர்கள், பல்வேறு துறைகளில் சாதிக்க தயாரானவர்கள். அவர்கள் இழப்பு எல்லாம் நம்ம பொருளாதாரத்திற்குத்தான் மிகப்பெரிய சவால்.

இதுவரை நாம் கொரோனா பாதிப்பிற்குப் பிறகு கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் உடல் ஆரோக்கியத்தின் மேன்மையைத்தான்! அதில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பொறுத்து தான் வரும்கால வளர்ச்சிகள் அமைய இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

பிரதமர் மோடி தேசத்தை 2024 5 டிரில்லியன் பொருளாதாரமாக வளரத் திட்டங்கள் அறிவித்தார் அல்லவா? அவற்றை தற்போது அமுல் படுத்த முடியாத நிலை இருப்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். என்றாலும் நாட்டின் வளர்ச்சியைக் கைவிட்டு விடவும் முடியாதே!

இது மருத்துவ துறைக்கான காலக்கட்டம். எல்லா மருத்துவமனைகளும் நிரம்பி விட்டன. கிடைத்த வருமானத்தில் வாங்கிய கடன் அனைத்தையும் கட்டி முடித்துவிடும் நிதி நிலை மேன்மையையும் பெற்றுள்ளனர்.

ஆகவே கொரோனா பிடியிலிருந்து சாமானியன் தப்பித்தப் பிறகு வசதியுடன் இருக்கும் துறைகளில் மருத்துவத் துறை நிச்சயம் முன்னணியில் இருக்கும்.

சமீபமாக உலகமே கொரோனா தொற்றை மட்டுமே கவனத்தில் வைத்துள்ள நாம் இதர நோய்களும் நமக்கு எதிரிகள் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

உலக சுகாதார மையம் அறிவத்திருக்கும் 10 மரண காரணங்களில் இருதய கோளாறு, சுவாச நோய்கள், குடல் பாதிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்பன காரணமாக இறப்போர் விகிதம் அதிகமாம். கூடவே அதிக எடை உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று கோடிட்டு காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் கொரோனா பெரும் தொற்றுக்கு எதிராய் நடத்தி வரும் அதிரடி யுத்தத்தை கண்டு வருகிறோம், தமிழக நலன் காக்கப்படும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.

ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர், முகக்கவசம் என தேவையான அனைத்தும் தயாரிப்பு அதிகரிப்புக்கு வழி கண்டார்.

மருத்துவ சேவைகள் கடைக்கோடி கிராமத்து தினக்கூலி தொழிலாளிகளுக்கும் சென்றடைய வேண்டிய மருத்துவ வசதிகளை விரிவுப்படுத்தியும் வருகிறார்.

தடுப்பூசி தயாரிப்பில் வல்லரசு

நாம் தடுப்பூசி தயாரிப்பில் உலக அரங்கில் வல்லரசு நாடுகளையும் விட உயர்ந்துள்ளோம். அதற்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது உலகப் போர் மற்றும் பல்வேறு யுத்தங்களில் மடிந்தவர்களை விட தொற்று நோய்களுக்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருந்ததை தெரிந்து கொண்டு தடுப்பு மருந்துகள் தயாரிப்பதை அவசியமாக கருதினர்.

ஆங்கிலேயர் ஏகோபத்தியத்தில் இருந்த நாடுகளில் நம் நாட்டில் தான் அவர்கள் காலத்திலேயே கிட்டத்தட்ட 15 தடுப்பூசி மருந்து ஆய்வகங்களை நிறுவியுள்ளனர்.

மும்பையில் துவங்கப்பட்ட ஹாப்கீன் மையம், Happkine Institute பிளேக் நோய்க்கு 1897ல் தடுப்பூசியை கண்டுபிடித்த உலகப் புகழ் நிறுவனமாகும்.

ஆனால் ஆங்கிலேயர்கள் நமது வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாததால் ஆராய்ச்சிகளை நிறுத்திவிட்டு தயாரிப்பை மட்டும் தொடர வைத்தனர்.

இந்திய கம்யூனோலாஜிகல்ஸ் லிமிடெட், பாரத் கம்யூனோலாஜிகல்ஸ் அண்டு பயோலாஜிகல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹாஃப்கின் பயோஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (கசெளலி), பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (கிண்டி) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா லிமிடெட், பாரத் பயோடெக் இன்டர்நேரஷனல் லிமிடெட், சாந்தா பயோடெக், பனேசியா பயோடெக் லிமிடெட், சிபிஎல் பயோலாஜிகல்ஸ் முதலியவையும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

உலகில் உள்ள சுமார் 65% குழந்தைகள் சீரம் நிறுவனத்தின் ஏதாவது ஒரு தடுப்பூசியையாவது எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு ஆண்டில் சுமார் 150 கோடி தடுப்பூசிகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன.

தற்போது கொரோனாவிற்கான தடுப்பூசியில் முன்னணியில் இருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பில் நாம் முன்னணியில் தான் இருக்கிறோம்.

ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை

ஆனால் இவற்றை உருவாக்க வேண்டிய ஆய்வில் மிக முக்கியமானது நுண்ணுயிர் பரிசோதனை கூடங்கள், அவை அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே உள்ளது.

ஆக நாம் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்க கொரோனா நுண் கிருமியை வளர வைத்து அதன் எல்லாவித குணாதிசயங்களை கண்டறியும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அது நம்மிடம் இல்லை.

ஆகவே நமது கண்டுபிடிப்புகளை அவர்களிடம் தந்து இதர ஆய்வுகளை செய்து வருகிறோம், இறுதியில் அவர்களிடமே கை ஏந்தி நிற்கிறோம்!

மருத்துவ வசதிகளில் தன்னிறைவு பெற நம் நாட்டிலேயே மேன்மையான ஆய்வு கூட வசதிகள் தேவைப்படுகிறது. அவற்றை தமிழகத்தில் நிர்மானிக்க ஸ்டாலின் தலைமையிலான அரசு விசேஷ கவனம் செலுத்தியாக வேண்டும்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பில் மிக முக்கிய பங்கு ஊட்டியில் உள்ள பாஸ்டர் என்று பொதுத்துறை நிறுவனமாகும். ஆனால் 1980 களில் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு தரமின்றி போனதால் ஏற்பட்ட விபரீதத்தால் அரசு அதை நிறுத்தியாக வேண்டிய நிலை உருவானது.

பிறகு இன்று வரை அதே சொட்டு மருந்தை சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்!

இனியும் அப்படி இருப்பதைவிட நுண்ணுயிர் ஆய்வு கூடங்கள், ஆராய்ச்சிகள் முதலிய படிப்புகளுக்கும் தொழில்முனைவோருக்கும் விசேஷ அந்தஸ்து வழங்கி எல்லா ஆதரவையும் தந்து வளர வைத்தால் வரும்காலத்தில் தமிழகத்தின் தயாரிப்பு உலக நாடுகளின் பாதுகாப்பு அரணாக இருக்கும். இது ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு.

பெரும் தொற்று சவால்களை சிறப்பாக சமாளிக்கும் ஸ்டாலின் இதில் மேலும் வெற்றி பெற வாழத்துகிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *