செய்திகள்

பெரும் கோடீஸ்வரர்கள் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 3 வது இடம்

நியூயார்க், ஏப். 8–

உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், உலகின் கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் முதலிடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டாலர் எனவும், இவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உள்ளதாகவும், அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலர் என்று குறிப்பிட்டுள்ளது.

4 வது இடத்தில் பில்கேட்ஸ்

கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட செல்வந்தர்களின் பட்டியலில் எலான்மஸ்க் 31 ஆவது இடத்தில் இருந்தார். தற்போது 28 இடங்கள் முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தில் எல்விஎம்எச் தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 150 பில்லியன் சொத்து மதிப்புடன் உள்ளார். அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸும், ஐந்தாவது இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தடுத்த இடத்தில் வாரன் பபெட் மற்றும் லாரி எலிசன், லாரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் உள்ளனர். இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான கவுதம் அதானி 50.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சர்வதேசப் பட்டியலில் 24ஆவது இடத்தில் இருக்கிறார்.

5 வது இடத்தில் ரஷ்யா

பில்லியன் டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 ஆயிரத்து 500 கோடி) சொத்து படைத்த பணக்காரர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் 140 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

724 பில்லியனர்களைத் தன்வசம் வைத்துள்ள அமெரிக்கா பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு இரண்டாம் இடம். அங்கு மொத்தம் 698 பில்லியனர்கள் உள்ளனர். ஜெர்மனி நான்காம் இடத்திலும், ரஷ்யா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *