சிறுகதை

பெருமிதம் – ராஜா செல்லமுத்து

முசிப் ஒரு முன்னுதாரனமானவன். எது எடுத்தாலும் அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவன்.

அப்படித்தான் செய்யும் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன்.

ஒருவேலையில் இறங்கிவிட்டால் அந்த வேலை நிறைவடைந்தது என்று மக்கள் சொல்லும் அளவிற்கு நம்பிக்கையானவன்.

அவனது வாழ்வில் அவனுக்கு சில சறுக்கல்கள் இன்னல்கள் பிரச்சினைகள் நடந்தது உண்மைதான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவன் எடுத்த சில விசயங்களில் சில நெருடல்கள். தாங்கிக் கொண்டான்.

ஒரு முறை அவன் தொலைநிலைக் கல்வியில் பயின்றபோது, பள்ளியில் இருந்து சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். சான்றிதழ் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தது.

தலைமையாசிரியர் தான் இட வேண்டும் அது தான் செல்லும் என்ற நிலையில் தினமும் ஒரு பள்ளிக்குச் சென்றான்.

ஆனால் பள்ளியில் தலைமையாசிரியை சந்திக்க விடாமல் ஒருவன் இடையில் நின்றான்.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு கையெழுத்து வாங்கித் தரேன் என்று சொல்லியபடியே இருந்தாரே ஒழிய உதவி செய்யவில்லை.

இந்த சான்றிதழைச் சீக்கிரம் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலிருந்த முசிப் அதற்காக தள்ளப்பட்டுத் துடித்தான்.

அந்த வேலை தடைபட்டது. தினமும் பள்ளிக்கு வருவதும் தலைமையாசிரியை சந்திக்க முடியாமல் போவதுமாக இருந்தது.

பொழுதுகள் தினமும் கழிந்தன.

அவன் பள்ளிக்கு வருவதைப் பார்த்து அங்கு பள்ளியைச் சுத்தம் செய்ய வந்த பெண் கேட்டாள்.

என்ன சார் தினமும் வாரீங்க. ஏதாவது பிரச்சினையா? என்றபோது…..

இல்லங்க ஒரு சர்டிபிகேட் தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கணும். அவரு இன்னொருத்தரு வாங்கிக் கொடுப்பதாகச் சொன்னார்.

ஆனால் இதுவரைக்கும் இல்ல. என்ன செய்றதுன்னு தெரியல என்றபோது….

‘அட வா சார், நான் வாங்கி தரேன்’ என்று அந்த சுத்தம் செய்யும் பணிப்பெண் கூப்பிட்டு போய் தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி கொடுத்தார்.

இதைப் பார்த்த முசிபுக்கு என்னவோ பாேலானது.

அந்தத் தாய் கையெழுத்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள். அந்தத் தாயைப் பெருமிதத்தோடு வணங்கி வெளியே வந்தான் முசிப். கையெழுத்து வாங்கி தருவதாகத் தினமும் ஏமாற்றியவன் எதிரில் வந்த போது அவனைக் கவனிக்காமலேயே பள்ளியை விட்டு வெளியேறினான் முசிப்.

சார் கண்டிப்பா இன்னும் ரெண்டு நாள்ல உங்க கையெழுத்து வாங்கி தாரேன் என்று சொன்னான்.

அதற்குப் பதிலேதும் சொல்லாமல் தலையை ஆட்டியபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் முசிப்.

அவன் எதற்காக கையெழுத்து வாங்கித் தரவில்லை என்பது இறைவனுக்குத் தான் வெளிச்சம்.

ஆனால் முசிப் அந்தத் தாயை உயர்வாக நினைத்துக் கொண்டு நடையைக் கட்டினான் பெருமிதம் கொண்டவாக.

Leave a Reply

Your email address will not be published.