செய்திகள்

பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீ: 5 கி.மீ சுற்றளவுக்கு கரும் புகை

அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்

சென்னை, ஏப். 28–

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீ அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு, 51 லட்சம் கிலோ திடக்கழிவுகள் சேகரமாகின்றன. அவை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யும் வகையில் பதனிடும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.மீதமுள்ள கழிவுகள், பெருங்குடி கிடங்கில் கொட்டப்படுகிறது. நேற்று மாலை மறுசுழற்சி செய்யும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது, குப்பை கிடங்கு முழுதும் பரவி கொழுந்து விட்டெரிந்தது.

தகவல் அறிந்து, துரைப்பாக்கம், மேடவாக்கம், ராஜ்பவன், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு விரைந்தன. கொழுந்துவிட்டெரிந்த தீயால், இரவு வரை தீயணைப்பு வீரர்களும் கண்ணெரிச்சலால் கடும் அவதிக்குள்ளாகினர். காற்றின் வேகம் காரணமாக, தீயிலிருந்து வெண்புகை வெளியேறி 5 கி.மீ சுற்றளவுக்கு கரும் புகை பரவியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறலால் கடும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தீ எரிந்து வருவதால் 9 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.