செய்திகள்

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு: கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை, செப். 1–

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலைப் பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலர் குமரன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீசார் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணன் ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கில் கனல் கண்ணன் ஜாமீன்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வெறுப்பை பரப்பும் வகையில் கனல் கண்ணன் பேசியுள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்று கொள்கை உடையவர் குறித்து ஏன் பேச வேண்டும் என கனல் கண்ணன் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற தேவையற்ற கருத்துகளை யூ.டியூப்-ல் பேசுவது பேஷனாகி விட்டதாகவும் தெரிவித்த நீதிபதி, கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட என்றும் இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.