சிறுகதை

பெரியவரின் மரணம் | ராஜாசெல்லமுத்து

அன்று வழக்கமான அதிகாலை ஆக இல்லாமல் இருந்தது. அடைத்த கதவைத் தாண்டி தப்படி சத்தம் காதுகளில் வந்து நிறைத்தது.

என்ன இது திடீர்னு காலைல சத்தம் கேட்குதே? என்று கண் விழித்தபடியே எழுந்தான் ராஜா அடைத்த கதவின் வழியே கொஞ்சமாக வந்து கொண்டிருந்த தப்பு சத்தம் கதவைத் திறந்ததும் அதிகமாக கேட்க ஆரம்பித்தது.

என்ன இது எதற்காக இந்த கேட்டை அடிச்சிகிட்டிருக்காங்க என்று குழம்பிய ராஜா வராந்தாவில் நடந்து, கீழே எட்டிப் பார்த்தான். அங்கே சாமியானா போடப்பட்டிருந்தது. ஆட்கள் குழுமியிருந்தார்கள். சேர் போடப்பட்டிருந்தது. எல்லோர் முகத்திலும் முகமூடி இருந்தது .ஒருவர் எல்லோருக்கும் காபி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அழும் சத்தம் கேட்டது. புரியாமல் விழித்த ராஜா, ஒருவரைக் கூப்பிட்டு கேட்டான்.

என்ன இது யாரு இறந்தது? என்று கேட்டதும்

தம்பி தெரியாதா. அந்த வீட்டில் பெரியவர் இருந்தார்ல அவர்தான் இறந்துட்டார் என்று அங்கே அமர்ந்திருந்த ஒருவர் சொன்னதும் ராஜாவுக்கு விசுக்கென்று இருந்தது மாடியில் இருந்த ஒரு பெரியவர் இறந்துட்டாரா? என்று ராஜா மறுபடியும் கேள்வி கேட்டனர்.

ஆமா தம்பி அவரேதான் நேத்து இறந்துட்டாரு.

நல்லாத்தான் இருந்தாரு. அடிக்கடி பார்ப்பேன். பேசுவேன் நல்லா ஆரோக்கியமா இருந்தார். எப்படி இறந்தார்? என்று கேள்வி மேல் கெள்வி கேட்டான் ராஜா.

என்னமோ தெரியல தம்பி. ரெண்டு நாளைக்கு முன்னாடி காய்ச்சல், சளி இருந்தது ஆஸ்பத்திரிக்கு போனார். ஆனா என்னனு தெரியல திடீர்னு இறந்துட்டாரு என்று சொன்னதும் ,

அடப்பாவி நல்லா இருந்த மனுசன் எப்படி இப்படி திடீர்னு இறந்துட்டாரே என்று அவனுக்கும் குழப்பம் கூடு கட்டியது . என்னமோ அவன் சிந்தனையில் வந்து ஒலித்தன. வரிசையாக மாலைகள் வந்தன. சராசரி கூட்டத்தை விட சற்று அதிகமாகவே கூட்டம் கூடியது .

சமூக இடைவெளி என்பது அந்த மரணத்தில் மரணமடைந்து போயிருந்தது.

ராஜா மாடியிலிருந்து பார்த்தபடியே இருந்தான். அவன் எண்ணத்தில் அந்தப் பெரியவர் மாடியின் மீது நடப்பதும் அவர் பேசுவதும் அவர் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பதும் ஞாபகம் வந்தது.

என்ன இந்த மனித வாழ்க்கை நேத்து நல்லாத் தான் இருந்தார். இன்னைக்கு மரணம் என்று அவனுக்கு அவனே சில கேள்விகளை எழுப்பிக் கொண்டான்.

ஒரு பக்கம் சங்கு ஊதி கொண்டிருந்தார்கள். சங்கு ஊதுவது அடங்கியதும் தப்பாட்ட காரர்கள் தப்பை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவிதமான ஊதுபத்தி சாம்பல் அந்த பகுதியை நிறைத்திருந்தது காலை 10 மணிக்கு நெருங்கியபோது வீட்டின் முற்றத்தில் கண்ணாடிப் பேழையை எடுத்துவிட்டு மரப் பெஞ்சில் கிடத்தப்பட்டார் அந்தப் பெரியவர் .

சாவு சொல்லும் தலையாரி சொந்த பந்தம் எல்லாம் வாங்க வாங்க என்று கூப்பிட உற்றார் உறவினர்கள் சொந்த பந்தங்கள் பேரன் பேத்திகள் என்று அந்த பெரியவரைச் சுற்றிச் சுற்றி வந்து வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருந்தனர்.

ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி நேசன் சேவடிபோற்றி “என்று தேவாரப் பாடலை அங்கு ஒருவர் பாடிக்கொண்டிருந்தார்.

மாலைகள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

கொட்டு அடிக்க தகுந்தது போல அங்கே சிலர் ஆடிக் கொண்டும் இருந்தார்கள். சங்கு சத்தம் தற்போது ஓய்ந்திருந்தது.

அந்தப் பெரியவரின் மனைவி பெரியவரின் கால்மாட்டில் அமர்த்தப்பட்டார். அந்த அம்மாவுக்கு பொட்டு வைத்தார்கள். தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். யாரோ அந்த பெரியவரின் நல்ல எண்ணங்களை செயல்களைச் சொல்லி அழுது கொண்டிருந்தது ராஜாவின் காதல் வந்து நிறைத்தது.

சுமார் ஒரு மணி நேர சடங்குகள் அந்த தெருவில் நடந்தன . அந்த வழியாக போகும் வாகனங்களும் அடுத்த தெருவுக்கு திருப்பி விடப்பட்டது .

நோய் தொற்றுக்கு பயந்த சிலபேர் அந்த பெரியவருக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் கூட மரணத்தில் கலக்காமல் மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சம்பிரதாயங்கள் முடிந்து அந்த பெரியவரை அமரர் ஊர்திக்கு தூக்கிச் சென்றார்கள் . பிணத்தின் பின்னே கூட்டம் சென்று கொண்டிருந்தது.

ராஜா மேலிருந்து பார்த்தபடியே இருந்தான் .

அத்தனையும் முடிந்து ஆயிற்று. இனிமேல் அந்தப் பெரியவர் மாடியில் நின்று பல் துலக்குவது செருமிக் கொண்டிருப்பது இனிமேல் கேட்கப்போவதில்லை.

70 ஆண்டுகள் வாழ்ந்த அந்த பெரியவரின் இறுதி நாள் இன்று என்றானது. இனிமேல் அந்த உருவமும் அந்த பேச்சோ இனி இந்த பூமியில் கேட்கப் போவதில்லை .

என்ன மனித வாழ்க்கை, ஒன்றுமில்லாத இந்த மனித வாழ்க்கைக்கு இவ்வளவு பிரச்சனைகளா? என்னதான் இந்த பூமியில் நாம் சேர்த்து வைத்தாலும் கடைசியில் கொண்டு போவது ஒன்றுமில்லை என்று தெரிந்தாலும் மனம் ஏன் அதை மறுக்கிறது . ஒவ்வொரு மனிதனும் பணத்தை சேர்க்க நினைக்கிறான். ஆனால் அவன் மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதை மட்டும் மறந்து விட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று ராஜா தனக்குள்ளே நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்கள் அடுக்கி வைக்கப்பட்டன.

யாரோ ஒருத்தி அந்தத் தெருவைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இன்னொருவன் பினாயில் தெளித்துக் கொண்டிருந்தான். போட்டிருந்த சாமியானா அவிழ்க்கப்பட்டது . முன்னை விட அந்த இடம் இப்போது சுத்தமாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் அந்த வீட்டில் மரணம் சம்பவித்த அதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது. முன்பு அழுகுரல் கேட்ட அதே வீட்டில் இப்போது இன்னொரு குரலும் கேட்டுக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட ராஜா ரொம்பவே அதிர்ச்சி அடைந்தான்.

ஒருவர் மதிய உணவு வசந்த பவனில் வாங்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்னொருவர் இல்லை இல்லை சந்திர பவனில் வாங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

இன்னொருவர் சரவணபவனில் வாங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இந்த மூவர் பேச்சையும் மறுதலித்து வேறொரு உணவகத்தை சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த மரண வீட்டில் எந்த உணவகத்தில் உணவு வாங்குவது என்ற வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இது அத்தனையும் உள்வாங்கிய ராஜா தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

இங்கே வாழும் வரை தான் வாழ்க்கை. வாழ்க்கை முடிந்தபிறகு எதுவுமே இல்லை என்பது அவன் புத்தியில் உறைத்தது .

அந்தப் பெரியவரை மறந்த குடும்பத்தார்கள் பொரியல் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். நகரம் ஒரு மனிதனின் வாழ்க்கையும் மரணத்தையும் இப்படித்தான் வைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் ராஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *