தன்னை எப்போதும் நாகரிகப் பெண்ணாகக் காட்டிக்கொள்ளும் ரீனாவிற்கு அழகு கொஞ்சம் அதிகம் இருந்தாலும் திமிர் ரொம்ப அதிகமாக இருந்தது.
கல்லூரியில் இருக்கும் எல்லா பெண்களை விடவும் ரீனாவின் உடை வித்தியாசமாக இருக்கும். அவள் உடுத்தும் உடை பார்ப்பவர்களுக்கு அநாகரீகமாகத் தெரிந்தாலும் தான் ஒருத்தி மட்டும் தான் இந்த ஜெனரேஷனுக்கு ஒத்துப்போகும் பெண் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வாள். அவளைச் சுற்றி எப்போதும் ஆண் நண்பர்கள் தான் குழுமி இருப்பார்கள். கேட்டால் நீங்கள் எல்லாம் இந்தக் காலத்து மனிதர்கள் இல்லை.
“ஆணும் பெண்ணும் பழகுறது தப்புன்னு யார் சொன்னது?. எங்க அப்பாவும் ஆண் தான்.என் உடன் பிறந்த சகோதரனும் ஆண் தான் அவங்க கூட எல்லாம் பேசும் போது யாரும் தவறாகச் சொல்லலையே என்று விதண்டவாதம் பேசுவாள் ரீனா.
கல்லூரி வளாகத்தில் அவள் அடிக்கும் லூட்டி .இருசக்கர வாகனங்களில் ஆண் நண்பருடன் செல்வது. டீக்கடை, பார்க் என்று எங்கு சென்றாலும் அவள் ஆண் நண்பர்களை விட்டு விலகுவதில்லை.
” இந்த ரீனா எப்பவும் ஆம்பளைங்க கூடவே இருக்காளே? அசிங்கமா தெரியலையா? என்று யாராவது கேட்டால்
” நான் அப்படித்தான். யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை. என்னுடைய மனசு என்ன சொல்லுதோ அதைத்தான் கேட்பேன். பார்க்கிற உங்களுக்கு வேண்டுமானால் அது தவறாத் தெரியலாம். நான் அதை தவறாவோ ? வேற மாதிரியோ எடுத்துக் கொள்ளல. எனக்கு பிடிச்சிருக்கு. நான் செய்றேன்” என்று கேள்வி கேட்பவரிடமே எதிர்வாதம் செய்வாள் ரீனா.
அதனால் மற்றவர்கள் அவளுடன் பேசுவதைத் தவிர்த்தார்கள். அவளைப் பற்றிய பேச்சு கல்லூரி முழுவதிலும் பரவிக் கிடந்தது. இவள் இப்படித்தான் என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டாள் ரீனா. அவளின் கற்பைப் பற்றிக் கூட சந்தேகப்படும் அளவிற்கு அவள் நடந்து கொண்டதால் அவள் மீது அபிப்பிராயம் அற்று இருந்தார்கள் அவளுடன் படிக்கும் தோழிகள்.
” ரீனா , பெண்ணுங்கிறவங்களுக்கு ஒரு வட்டம் இருக்கு. அந்த வட்டத்துக்குள்ள வாழ்ந்தாதான் வாழ்க்கைச் சிறப்பா இருக்கும். தான் தோன்றித்தனமா எப்பப் பார்த்தாலும் ஆம்பள கூட நீ சேந்து இருக்கிறது அவ்வளவு நல்லதில்ல. நீ ஆம்பளைங்க கூட சேர்றத கொஞ்சம் தவிர்த்தா உனக்கு நல்லது ” என்று அவளுடன் படிக்கும் தோழிகள் சொல்ல
” நீங்கள் எல்லாம் ஓல்ட் ஜெனரேஷன். நான் தான் இந்த காலத்துப் பொண்ணு மாதிரி இருக்கிறேன். அது என்ன ஆண் பெண் எல்லாரும் எனக்கு ஒன்னு தான் ” என்று கேள்வி கேட்பவர்களையே கேள்வி கேட்பாள் ரீனா . அதிலிருந்து யாரும் அவளுடன் பேசுவதை விரும்பாமல் இருந்தார்கள். அங்கு தொட்டு இங்கு தொட்டு கல்லூரி முதல்வர் வரை சென்றது அவளின் பழக்க வழக்கங்கள்.
“ரீனா நீ எப்ப பார்த்தாலும் ஆம்பளைங்க கூடயே சுத்திக்கிட்டு இருக்கியாமே? இது தவறு நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா ,நாங்க தான் உங்க வீட்டுக்கு பதில் சொல்லணும். பொம்பள புள்ள மாதிரி நீ நடந்துக்குவேன்னு நினைக்கிறேன்” என்று முதல்வர் கொஞ்சம் கடிந்து அனுப்பினார்.அவர் முன்னால் நிற்கும் வரை அமைதி காத்துக் கொண்டிருந்தவள் முதல்வர் அறையை விட்டு வெளியே வந்ததும்
“ஏன் இந்த மனுசங்க எல்லாம் ஆம்பள கூட பேசறத தவறா நினைக்கிறாங்க? ஒரு ஆணும் பெண்ணும் பழகிட்டாத் தப்பாகுமா? ஏன் இது இவங்களுக்கு புரிய மாட்டேங்குது ” என்று முதல்வருக்கே புத்தி சொல்லிக்கொண்டு வெளியே வந்தாள் ரீனா .
மாதங்கள் கடந்தன
அவளின் நடவடிக்கை ரீனாவின் அப்பாவிற்கு எட்டியது.
” ரீனா நீ போயிட்டு இருக்குற பாதை தப்புன்னு நினைக்கிறேன். எப்போ பாத்தாலும் நீ ஆம்பள புள்ளைங்க கூடயே சுத்திக்கிட்டு இருக்கியாமே? இது தவறு. இது உனக்கு வேணா இது சரியாத் தெரியலாம். உன்ன பெத்த அப்பா அம்மாவுக்கும் உன்கூட பிறந்தவங்களுக்கும் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். உன் கூட சுத்திக்கிட்டு இருக்க கூடிய அந்த ஆம்பளைங்களோட வீட்ல இருக்க பொண்ணுங்க, வேற ஆண்கள் கூட சுத்துனா அவங்க சம்மதிப்பாங்களான்னு மட்டும் நீ கேட்டுப்பாரு.. அப்புறம் தெரியும் உன் கூட சுத்துற ஆம்பளைகளுடைய அருமை” என்று அப்பாவும் தன் பங்குக்குத் திட்டினார் .
அப்பா சொல்வதையும் அவள் காதில் ஏற்றிக் கொள்ளவில்லை.
” ஏன் எப்ப பாத்தாலும் என்னையே குற்றம் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆண் நண்பர்கள் கூட இருப்பது தவறா என்ன? இதனால் என்ன வந்து விடப் போகிறது? என்று தன்னைத்தானே நியாயப்படுத்திக் கொண்டு மற்றவர்கள் சொல்வதை எல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொண்டிருந்தாள் ரீனா .
கல்லூரி முடிந்து ஒரு அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றாள். அந்த அலுவலகத்தில் இவளின் நடவடிக்கையைப் பார்த்து வேலை காலி இல்லை என்று விரட்டி விட்டார்கள். சரி வேறு இடத்திற்குப் போகலாம் என்றால் அங்கேயும் அதே நிலை.
ஏன் ? என்று விசாரித்த போது
” எங்க கம்பெனில ஆம்பளைங்க நிறைய பேரு வேலை பாக்கிறாங்க. அவங்க கூட நீ பழகி அது ஏதாவது தப்பா நடந்துச்சுன்னா, எங்க கம்பெனிக்கு தான் அசிங்கம். அதனால வேற இடம் பாருங்க” என்ற வார்த்தையே அவளைச் சுற்றிச்சுற்றி அடித்தது.
” சரி திருமண செய்து வைத்து விடலாம் “என்று முடிவு எடுத்தார் ரீனாவின் அப்பா. ஆனால் அந்தத் திருமணமும் கூட அவளுக்குக் கை கூடவில்லை. அவளின் செய்கை, அவளின் நடவடிக்கைகள் மாப்பிள்ளை வீட்டிற்கு பிடிக்காமல் போனதால் அவளின் திருமண வாழ்க்கை கூடத் தள்ளிப் போனது.
” என்ன இது? ஒரு பெண் ஆணுடன் பழகுவது தவறா? இதனால் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறதா? இந்தச் சமூகம் ஒரு பெண்ணைச் சுதந்திரமாக வாழ்வதற்கு சம்பாதிக்காது போல ” என்று வருந்தி இருந்தபோது
“ரீனா இங்க வா” என்று அழைத்தாள் அவளின் அம்மா.
“சேல மேல முள்ளு விழுந்தாலும் முள்ளு மேல சேல விழுந்தாலும் சேலைக்குத்தான் நஷ்டம்’’. ஒரு பெண்ணுங்கிறவ இந்தச் சமுதாயத்தில் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கு. அத மீறி நீ வாழணும்னு நினைச்சா அது உனக்கு மட்டும் சுதந்திரமா இருக்கலாம். மத்தவங்களுக்கு அது சிறை . உன் நடவடிக்கையை மாத்துனா உன் வாழ்க்கைக்கு உன்ன பெத்தவங்களுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன்” என்று ஒரே மூச்சில் சொல்லிவிட்டு நகர்ந்தாள் ரீனாவின் தாய்.
அன்று இரவு முழுவதும் ரீனாவால் தூங்க முடியவில்லை .மறுநாள் காலை எழுந்தாள்.
“ரீனா இன்னிக்கு ஒரு கம்பெனியில இன்டர்வியூ வந்திருக்கு போகலாமா?
என்று கூப்பிட்டார் ரீனாவின் அப்பா.
“இல்லப்பா நானே போய்க்கிறேன்.இனிமே எந்த ஆம்பளைங்க கூடவும் நான் போறதாக இல்லப்பா “
“ஆம்பளைங்க கூட உனக்கு இருந்த நட்ப முறிச்சிக்கிட்டதுக்கு நன்றி.நான் உங்கப்பா என்கூட வரலாமே?”
“இல்லப்பா நீயும் ஆம்பள தானே? என்றாள் ரீனா.
வாயடைத்து நின்றார் அப்பா.