டெல்லி, ஆக. 22–
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம் தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை, சீலிடப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறிக்கை தாக்கல்
இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். பெரும் போராட்டத்தை தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும் பெண் மருத்துவர் கொலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ தாக்கல் செய்தது.