அண்டனானரீவோ, பிப். 13–
பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் செய்யப்படும் வகையில் மடகாஸ்கர் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் கடுமையான தண்டனைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கற்பழிப்பு குற்றங்களுக்கு பொதுவாக மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனினும் மற்ற நாடுகளில் மனித உரிமை சட்டங்களின் காரணமாக மரண தண்டனை வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும், கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான மடகாஸ்கர், பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் ரசாயனம் செலுத்தி அல்லது அறுவை சிகிச்சை செய்து குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக சில மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலோர் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.
ஆண்மை நீக்கம் எப்படி?
மேலும் இந்த சட்டத்திற்கு மடகாஸ்கர் நீதிமன்றத்தில் அனுமதியும் பெறப்பட்டு அந்நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஸ் ரஜோலினா கையெழுத்துடன் நடைமுறைக்கு வந்திருக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான ரண்ட்ரிமானந்தேசோவா தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட விதிகளின்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோரின் ஆண்மை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். 10 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ரசாயன முறையில் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் ஆண்மை நீக்கப்படும். மேலும் 14 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ரசாயனம் செலுத்தி ஆண்மை நீக்கப்படும் என சட்டம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. எனினும் அறுவை சிகிச்சையின் மூலம் ஆண்மை நீக்கம் செய்யும் சட்டத்தை மடகாஸ்கர் அறிமுகப்படுத்தி இருப்பது பல நாடுகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது.