செய்திகள்

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 பவுன் நகைகள் கொள்ளை

மதுரை, மே 12–

மதுரை அருகே பாசிங்காபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 450 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் ஷர்மிளா, மதுரை அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகரில் வசித்து வருகிறார். இவர் கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தன் தாயாருடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் வீட்டில் மராமத்துப் பணிகள் நடந்து முடிந்த நிலையில், தாயார் வெளியூர் சென்றுவிட, வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஷர்மிளா தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

250 பவுனா? 450 பவுனா?

உடனடியாக அருகிலுள்ள அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, எஸ்.பி அரவிந்த், டி.எஸ்.பி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 250 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் ரொக்கமும் கொள்ளை போனதாகச் சொல்லப்பட்டது.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கும்போது, “இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வீட்டில் சமீபத்தில் மராமத்துப் பணிகள் நடந்து வந்துள்ளது. அதை அவர் தாயார் இருந்து கண்காணித்து வந்துள்ளார். அந்த வேலைகள் முடிந்த பின்பு தாயார் வெளியூருக்குச் சென்றுள்ளார். அதனால் வீடு பூட்டிக்கிடந்த நிலையில், இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. மரமாத்துப் பணியில் ஈடுபட்டவர்களிடம் விசாரிக்க உள்ளோம். இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது 450 பவுன் திருடுபோயுள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 450 பவுன் தங்க நகைகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ. 2 கோடியே 25 லட்சம் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *