செய்திகள்

பெண்ணை தாக்கி மண்டையை உடைத்த பாஜக நிர்வாகியை பிடிக்க தனிப்படை

டிரைவரை கைது செய்து போலீஸ் விசாரணை

சென்னை, ஜன. 25–

பிரதமர் வருகையின் போது ஆட்களை சேர்ப்பதற்காக பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், ஆதரவாளர்களை வைத்து பாஜக பெண் நிர்வாகியை தாக்கிய, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் தேவி. தேவியின் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதை ஒட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியின் நிவேதா என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பணத்தில் பங்கு வேண்டும்

இதனையடுத்து கடந்த 21 ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்க தொடங்கியுள்ளனர். பிரதமர் வருகையின்போது ஆட்களை அழைத்து வருவதற்காக அமர் பிரசாத்திடம் நீங்கள் வாங்கிய பணத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் எனவும் அப்போது மிரட்டி உள்ளனர்.

தாக்குதலில் தேவியின் மண்டை உடைந்து உடனடியாக பாரதிராஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், 2 நாட்கள் வெளியே வருவதற்கு பயமாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறினால் உங்களை குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் என ஸ்ரீதர் மிரட்டி உள்ளதாகவும், அண்ணாமலையின் வலதுகரமாக செயல்படும் அமர் பிரசாத் உத்தரவிலேயே இந்த தாக்குதல் நடந்ததாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள கோட்டூர்புரம் போலீசார், அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள நிலையில் அவரது கார் டிரைவரை கைது செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *