திண்டுக்கல், ஏப். 11–
காலை உணவுத்திட்ட சமையல் பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த பாரதீய ஜனதா மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், காலை உணவு திட்ட சமையலராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் காலை உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும் பாஜக மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் தனது வண்டியில் ஏறுமாறு கூறியிருக்கிறார்.
பாஜக செயலர் கைது
சமையல் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமையல் செய்யும் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறியதால் அவரது வண்டியில் ஏறியதாகவும், சமையல் கூடத்துக்குச் சென்ற பின்னர் அங்கு தனது விரலை பிடித்து வாயில் வைத்ததாகவும், கட்டிப்பிடித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் சமையலர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் பாலியல் புகாரில் சிக்கிய, திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்டச் செயலாளரும், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பார்வையாளருமான மகுடீஸ்வரன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தனர். இந்நிலையில், காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைது செய்யப்பட்டார்.