செய்திகள்

பெண்கள் மேடைகளில் உட்கார காரணம் தந்தை பெரியாரும் அண்ணாவும் தான்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை, செப். 18–

வழக்குகள் மூலம் அதிமுகவை சிதைக்க நினைக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தினமணி திரையரங்கம் பகுதியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசியதாவது:–

“பெண்கள் மேடையில் உட்கார தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மட்டுமே காரணம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு சம உரிமை, சமத்துவத்தை நடைமுறைப்படுத்தியது அறிஞர் அண்ணாவும், பெரியாரும் தான். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர் சேலை கட்டிய சிங்க பெண்மணி ஜெயலலிதா. எதிர்பாராத விதமாக ஜெயலலிதா மறைந்துவிட்டார்.

ரெய்டுக்கு அஞ்ச மாட்டோம்

இந்நிலையில், எதை எதையோ ஸ்டாலின் பேசினார். நீட் ரத்து எனக் கூறி இப்போதும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கின்றனர். மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் எனக் கூறி பணக்காரர்கள் வாக்குகளையும் வாங்கிவிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்துகிறார்கள். ரெய்டால் அதிமுகவை நெருக்குகிறார்கள். வழக்கு போட்டால் பயந்துவிடுவார்கள் என நினைக்கின்றனர். நாங்கள் பனங்காட்டு பாரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். அஞ்சாத தலைவர் வழியிலும், நெஞ்சுரம் கொண்ட தலைவியின் வழியிலும் வந்தவர்கள் நாங்கள். உங்கள் அப்பா கலைஞர் காலத்திலேயே மிரட்டல் உருட்டல் அதிகாரத்தை பார்த்தவர்கள். இதற்கெல்லாம் ஒரு நாளும் பயப்பட மாட்டோம்.

திமுக அரசு நடந்தால் வரி, நின்றால் வரி, சும்மா இருந்தலும் வரி போடுவார்கள். மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசுக்கு சரியான பதிலடியை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.