போஸ்டர் செய்தி

பெண்கள் பாதுகாப்புக்கு ‘181’ தொலைபேசி சேவை எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்

சென்னை, டிச.10–
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (10–ந் தேதி) தலைமைச்செயலகத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் 51 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் – தாம்பரம் சேவை இல்ல வளாகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணைபுரியும் ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணைபுரியும் 24 மணிநேர 181 கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை, ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2018–19–ம் ஆண்டு பயனாளிகளுக்கு திருமண உதவி வழங்குதல் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் திட்டம் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த சேவை மையம் என்பது பொது இடங்களிலோ, குடும்பத்திலோ, பணிபுரியும் இடத்திலோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு துணைபுரியும் திட்டமாகும். உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, உணர்வு ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வயது, ஜாதி, மதம், இனம், கல்வித்தகுதி, திருமண நிலை, கலாசாரம் போன்ற எந்தவித பாகுபாடுமின்றி உதவி அளிக்கும் திட்டமாகும்.
சேவை மைய கட்டிடங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் சேவை இல்ல வளாகத்தில் 41 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடுமையால் வீடுகளிலோ, வெளியிடங்களிலோ, பணிபுரியும் இடங்களிலோ பாதிக்கப்படும் பெண்கள் அவசர உதவி பெறும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் பெண்களுக்கான 181 கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவசர காலங்களில் பெண்கள் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காவல்துறை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ், சட்டஉதவி போன்ற இதர அத்தியாவசிய துறைகளின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.
24 மணி நேர சேவை
மேலும், பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விவரங்களையும், குடும்ப வன்முறை மற்றும் இதர வகை கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் குறித்தும் கேட்டறியலாம். பெண்களின் நலனிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் 62 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான 24 மணிநேர 181 கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையை (24 X 7 Toll Free 181 Women Helpline) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
ஏழை பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
தாலிக்கு தங்கம்
இத்திட்டத்திற்காக 2018–19–ம் நிதியாண்டிற்கு 724 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 1,11,000 பயனாளிகள் பயன் பெற உள்ளனர். இத்திருமண உதவித் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2018–2019–ம் ஆண்டிற்கான 7 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் ஏற்படுத்தும் பொருட்டும் தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினத்தவருக்கான நல வாரியம் மூலம், சுயதொழில் செய்யவும், கல்வி பயில ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
மூன்றாம் பாலினத்தவர்
தொழில் செய்ய உதவி
மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் மூலம் மூன்றாம் பாலினத்தோருக்கு சொந்த தொழில் தொடங்க அளிக்கப்பட்டு வந்த மானியத் தொகையான 20 ஆயிரம் ரூபாயை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 2018–19–ம் நிதியாண்டில் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 150 மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறுவர். இத்திட்டத்தின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 பயனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் வி. சரோஜா, ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி. விஜயராஜ் குமார், சமூக நலத்துறை இயக்குநர் வே. அமுதவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *