செய்திகள்

பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார்

பாட்னா, நவ.8–

பீகார் சட்டசபையில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட முதல்வர் நிதீஷ் குமார் மன்னிப்பு கோரினார்.

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த கணக்கெடுப்பின் 2ம் கட்ட அறிக்கையை அம்மாநில சட்டசபையில் நேற்று முதலமைச்சர் நிதீஷ் குமார் தாக்கல் செய்து பேசினார்.

அப்போது பெண்கள் கருத்தரிப்பு வீதம் 4.2-ல் இருந்து 2.9 ஆக குறைந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு இளம் தலைமுறை பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு இருப்பதே பிரதான காரணம். இதில் பெண்கள் கல்வி பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது இழிவான சொற்களை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பீகார் மாநில பாரதீய ஜனதா சார்பில் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

இந்திய அரசியல் வரலாற்றில், நிதீஷ் குமார் போன்ற அநாகரீகமான தலைவர் யாரும் இல்ல. நிதீஷ் குமார் உடனடியாகவும் வெளிப்படையாகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிய கண்ணியம் மற்றும் மரியாதையை அவமதிக்கும் வகையில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: நிதீஷ்குமாரின் கருத்துகளைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மக்கள் பேசுவதற்கு தயங்கும் மற்றும் கூச்சப்படும் விவகாரம் பற்றி தான் விளக்கியுள்ளார். மக்கள் தொகை கட்டுப்படுத்துவது தொடர்பாக தான் அவர் விளக்க முயன்றுள்ளார் என தெரிவித்தார்.

இந்த நிலையில் நிதீஷ்குமார் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் சட்டசபையில் பெண்களின் மாண்பு மற்றும் மரியாதையை அவமதிக்கும் வகையில் நிதீஷ்குமார் பேசி உள்ளார் என தேசிய மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சர்ச்சைக்குப் பின் தனது பேச்சுக்கு நிதீஷ்குமார் மன்னிப்பு கேட்டார்.

அவர் இதுகுறித்து கூறுகையில் “நான் கூறிய வார்த்தை பெண்களை அவமரியாதை செய்யும் அர்த்தம் அல்ல. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *