செய்திகள்

பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி இல்லை: அமெரிக்க உச்சநீதிமன்றம்

பெண்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்–அதிபர் பைடன்

நியூயார்க், ஜூன் 25–

அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கும் தனது முந்தைய தீர்ப்பை செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்தது அந்நாட்டு பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் அதிகம் உள்ள மிஸ்ஸிசிப்பி மாகாண அரசு கடந்த 2018ம் ஆண்டு, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவந்தது. அந்த மாகாணத்தில் உள்ள கருக்கலைப்பு மையமான ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம் அந்தச் சட்டத்துக்கு தடை விதித்தது. ‘ரோ வி வேட்’ வழக்கையும் மேற்கோள் காட்டி இத்தகைய உத்தரவை பிறப்பித்தது.

அதிபர் ஜோ பிடன் எதிர்ப்பு

இந்த உத்தரவை எதிர்த்து மிஸ்ஸிசிப்பி மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘கருக்கலைப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மாகாணங்களில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க எனது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவேன். கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு நீதிமன்றம் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை உச்சநீதிமன்றம் பறித்துள்ளது என்றார்.

சுமார் 50 ஆண்டுகளாக அமெரிக்கப் பெண்களுக்கு கருக்கலைப்பு பாதுகாப்பு இருந்து வந்தது. இந்நிலையில், இத்தகைய உத்தரவால் கருக்கலைப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.