சினிமா செய்திகள்

பெண்கள் உரிமைக்கு குரல் கொடுக்க சினிமாப் பாடலாசிரியர் கபிலன் மகள் துவக்கிய ‘டிஜிட்டல்’ பத்திரிகை

சென்னை, செப். 16

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளும், எழுத்தாளருமான தூரிகை, பெண்களுக்கான ‘‘BeingWomen’’ என்ற பெயரில் பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையைத் தொடங்கி உள்ளார். இயக்குநர்கள் சேரன், பா.ரஞ்சித், நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டார்கள். அட்டைப் படத்திற்கு ‘குயின்’ என்று பெயர் சூட்டப்பட்டது. நடிகை விமலா ராமன் நடித்துக் கொடுத்தற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

பத்திரிகை துவக்கியதன் நோக்கம் பற்றி தூரிகை கபிலன் கூறியதாவது:–

‘‘பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள், எந்த எந்த துறையில் சாதனை புரிந்தார்கள்.. அவர்களுடைய திறமைகள் என்னென்ன.. பெண்களுக்காக சிறிய அளவில் என்ன நன்மைகள் செய்கிறார்கள்.. ஒரு பெண் மீது அனைவரின் கவனமும் ஈர்க்கப்படும் காரணம் என்ன.. என்பது போன்ற.. முழுக்க முழுக்க பெண்களின் நேர்மறைகளைப் பற்றி மட்டுமே இந்த பத்திரிகையில் எழுதப்படுவதாக திட்டம் போட்டுள்ளேன்.

சுருக்கமாக.. பெண்களைக் கொண்டாடுவதற்கு தான் இந்த பத்திரிகை.

ஒரு பெண் தன் குடும்பத்திற்காக தள்ளுவண்டி கடை நடத்துவது தான் சாதனை. அந்த பெண் தான் மற்ற பெண்களுக்கு ஊக்கம். இந்த மாதிரி பெண்களைப் பற்றி தான் எழுதப் போகிறேன்.

பெரும்பாலானோர், பெண்களின் நேர்மறைகளை விட எதிர்மறையான விஷயங்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். உதாரணத்திற்கு மாணவி அனிதாவின் தற்கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்று எதிர்மறையான விஷயங்கள். இதை உடைப்பதற்காகவும், பெண் சமுதாயத்தை அழகாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களைப் பற்றிய நேர்மறைகளைக் கொத்து கொத்தாக கொடுக்க போகிறேன்’’.

காதல் தோல்வியை சமாளித்தது எப்படி?

பொதுவாக ஒரு பெண் வெற்றியடைந்தால் அந்த பயணத்தில் சக பெண்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், இதில் புதுமையான ஒரு விஷயத்தைக் கொண்டு வரப் போகிறோம். பொதுவாக ஆண்களுக்கு காதல் தோல்வி என்றால் சில அடையாளங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, தாடி வளர்ப்பார்கள். ஆனால், பெண்களுக்கு அப்படி எந்தவொரு அடையாளங்களும் இருக்காது. அதைக் கண்டுபிடித்து, காதல் தோல்வியை ஒரு பெண் எப்படி சந்திக்கிறாள்? அதிலிருந்து கடந்து எப்படி வெளியே வருகிறாள்? என்பதை சொல்லப் போகிறோம். ஏனென்றால், ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவள் காதல் தோல்வியை எளிதாக எடுத்துக் கொண்டாள் என்று அர்த்தமில்லை. அதற்காகதான், பெண்களின் காதல் தோல்வியை வெளிக் கொண்டு வரவிருக்கிறோம்.

மேலும், என்ன தான் சமூக மாற்றமடைந்தாலும் பெண்கள் மீதான இனவாதம் என்பது இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பெண், ஆண் கருப்பாக இருக்கிறான் என்பதற்காக அவனை ஒதுக்குவதில்லை. மாறாக, கருப்பாக, உயரமாக இருக்கும் ஆண்களை கொண்டாடுகிறோம். அதே பெண்கள் என்று வரும்போது பல ஆண்கள், நிறத்தைச் சுட்டிக்காட்டி நிராகரிக்கிறார்கள்.

அதேபோல், ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும்போது, கணவரை ஏதோவொரு வகையில் இழந்து தனி ஆளாக அவளது வாழ்வை எப்படி எதிர்கொள்கிறாள்? குடும்பத்தை தனி ஆளாக நின்று வழிநடத்தும் பெண்கள், சமுதாயத்திற்காக சவால்களை சந்திக்கும் பெண்கள், யாருடைய ஆதரவுமில்லாமல் தொழில் முனையும் பெண்கள் என்று அனைத்துப் பெண்களையுமே கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

மேலும், நடை, உடை, பாவனைகளுக்கும் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பார்க்கின்ற பார்வையில் தான் இருக்கிறது. அதேபோல், தெரிந்தே தவறு செய்பவர்களையும் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தூரிகை கபிலன் கூறினார்.

சேரன், பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, பெண்களுக்காக பெண்களைப் பற்றிய நேர்மறை சக்தியை உருவாக்குவதற்கும், பெண்களுடைய சாதனைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடும் இந்த டிஜிட்டல் பத்திரிகை தொடங்கப்பட்டிருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் சேரன் பேசும்போது, இந்தப் பத்திரிகையை வாங்க வேண்டிய அவசியமில்லை; வாசிப்பது மிகவும் எளிது. நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் கைகளிலிருக்கும் கைபேசி மூலமாகவே வாசிக்க முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *