செய்திகள்

பெண்கள் இடஒதுக்கீட்டை சிறப்பாக நிறைவேற்றும் தமிழ்நாடு: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்

சென்னை, ஏப். 17–

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அனைத்து மட்டங்களிலும் சிறப்பாக நிறைவேற்றும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு பாராட்டு விழா, சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று நடந்தது. விழாவில் சங்க துணைத் தலைவர் வேதவல்லி குமார் வரவேற்றார். சங்கத் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமை வகித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கண்ணம்மாள், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் எல்.விக்டோரியா கவுரி, அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.ரேவதி தேவி, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ஆர்.தேன்மொழி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ்நாடு சிறப்பிடம்

இவ்விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஏற்புரையில் பேசியதாவது:–

சட்டத்தின் பலனை சமுதாயத்தில் உள்ள ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியாக கொண்டு சேர்க்க வேண்டும். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் அல்ல; முன்னால்தான் பெண்கள் இருக்கிறார்கள். நீதித்துறை அதிகாரிகள் பணியிடத்திலும் 50 சதவீதம் அளவுக்கு பெண்கள் உள்ளனர். அந்த அளவுக்கு பெண்களுக்கு கடமைகள் அதிகம். பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அனைத்து மட்டங்களிலும் சிறப்பாக நிறைவேற்றும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது.

முன்பெல்லாம் கொலை வழக்குகளும், சிவில் வழக்குகளும் அதிகரித்து வந்தன. ஆனால் தற்போது, ஒயிட்காலர் குற்றங்கள், சைபர் குற்றங்கள் என தொழில்நுட்பரீதியாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே வழக்குகளின் தன்மைக்கேற்ப, தகுதியான பெண் வழக்கறிஞர்களை நீதிபதியாகக் கொண்டு வருவதில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.