சென்னை, மே 28–
பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வேண்டுமா…?
ஒவ்வொரு இளம்பெண்ணும், சிறுமியாக படிக்கிற காலத்தில் ஒன்று அவர்களுக்குப் பள்ளியில் தற்காப்பு கலையைக் (கராத்தே -சிலம்பு) கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையா… தனியார் அமைப்பின் மூலம் தனியாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது, இன்றைய காலத்தின் கட்டாயம்-
என்பதை அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். படம் : ‘வேம்பு’.
பொழுதுபோக்குக்காக எடுக்கும் ஒரு படம், அதில் உருப்படியாக ஒரு கருத்தையும் சொல்ல வேண்டும் என்ற இயக்குனரின் ‘உடும்புப் பிடி’க்கு துணை நின்று இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள், கோல்டன் சுரேஷ், எஸ் விஜயலட்சுமி. இருவரையும் மனம் திறந்து பாராட்டியாக வேண்டும்.
ஓரளவுக்கே பரிச்சயமான ‘மெட்ராஸ்’ ஹரி கிருஷ்ணன் நாயகன், கறுப்பு நிறம் என்றாலும் அதில் ஒரு குறு குறு வசீகரம். ஷீலா நாயகி. ஜெயராவ், பரியேறும் பெருமாள்,- கர்ணன் புகழ் ஜானகி தவிர மற்ற முகங்கள் அத்தனையுமே கேமராவுக்கு புதுசு. கிராமப்புற நாடக கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு, மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரிய அம்சம்.
ஒளிப்பதிவாளர் ஆர். குமரன் (தனுஷின் தங்கமகனில் பணியாற்றியவர்). எடிட்டர்-:கே.ஜே. வெங்கட்ரமணன். இசை- மணிகண்டன் முரளி. கிராமிய மணம் வீசும் பாடல்கள்: இசைக்கருவிகள் காயப்படுத்தாத வரிகள், பாடகர்களின் குரலில் தெளிவாக ஒலிக்கிறது சிறப்பு (குரல்கள்- அந்தோணிதாசன், மீனாட்சி இளையராஜா, ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது பெற்ற சுந்தர் ஐயர், கபிலன்).
முழு படப்பிடிப்பும் கிராமப் பகுதியில். அந்த கிராமமும், மலையும் மலை சார்ந்த இடமும், அழகு.
பெண் என்றாலே குறை சொல்லும் இந்த சமூகத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு முன் தந்தை, திருமணத்திற்கு பின் கணவன் இருவரால் அவர்களின் ஆதரவில்… எப்படி தலை நிமிர்த்தி சமூக பார்வையை தன் மீது பதிய வைக்கிறாள் என்பதே கதை.
பெண் கல்வி,- பெண் சுதந்திரம் பற்றி பேசிய பெரியாரின் மேடை பிரசங்கத்தை, எழுந்து வரும் நேரத்தில் ஒலிக்கவிட்டிருக்கிறார் இயக்குனர் (அறிஞர் அண்ணா,- கலைஞர் கருணாநிதி-, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படங்களோடு).
புதுமண தம்பதி (ஹரி கிருஷ்ணன்- – ஷீலா) மலைப்பகுதியில் வருகிறபோது விபத்தில் கண் பார்வை இழக்கும் காட்சியில்… நாயகன் நாயகி இருவர் மீதும் அனுதாபம் பிறக்கும்.
முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் ஷீலா: நினைவில் நிற்கிறார், குறை ஒன்றும் இல்லை.
‘அமரர்’ மாரிமுத்து. எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் பேச வைப்பவர் (நினைவிருக்குமே – யார் என்று? டெலிவிஷன் தொடர் ஒன்றுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்துவிட்டு… திடீர் நெஞ்சு வலிக்காக தானே காரை ஓட்டிப் போய் மருத்துவமனையில் சேர்ந்து, சிறிது நேரத்தில் உயிரிழந்தாரே…) எம்எல்ஏவாக 5 நிமிடம் மட்டுமே தலை காட்டியிருக்கிறார்.
காதல் கதையில் ஒரு மெசேஜ். பூஜை போட்ட படத்தை வெற்றிகரமாக முடித்து திரைக்கு கொண்டு வந்திருப்பது யூனிட்டுக்குப் பெருமை.