செய்திகள்

பெண்களின் இலவசப் பயணத்தால் நட்டமில்லை: அமைச்சர் சிவசங்கர்

சேலம், ஜூலை 6–

அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் போக்குவரத்து கழகத்துக்கு நட்டம் ஏற்படவில்லை என்று சேலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு கூட்டம் நடத்தினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

கழகத்துக்கு நட்டமில்லை

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “தமிழ்நாட்டில் இலவச பேருந்து கட்டண திட்டத்தில் இதுவரை 132 கோடி முறை, பெண்கள் பயணம் செய்துள்ளனர். இந்தியாவில் வேறு எங்கும் இந்த திட்டம் இல்லை. இந்த திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,600 கோடி நிதி வழங்கி உள்ளார். எனவே இந்த திட்டத்தால் போக்குவரத்து கழகத்திற்கு எந்த வித நட்டமும் ஏற்படவில்லை.

கிராமப்புறங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் வழங்கப்படும் திட்டம் மூலம், ஏராளமான மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பேருந்து வசதிக்காக தலைமை ஆசிரியர்களை கொண்டு தனியாக வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் தகவல்களின்படி தேவையான இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தனியார் சொகுசு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.