சிறுகதை

பெட் கிளினிக் – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் இருந்து சிவன் கோயில் இருக்கும் தெருவையொட்டி சென்றது ஒரு நீளமான தார்ச் சாலை .

இரண்டு பக்கமும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள். சாலையின் இடது பக்கத்தில் இருந்தது ஒரு பெட் கிளினிக்

அந்த கிளினிக்கு தினமும் கார், ஆட்டோ, பைக் என்று நாய்களை தூக்கிக் கொண்டு வந்து அதற்கு மருத்துவம் பார்த்துச் செல்வார்கள். விலை உயர்ந்த அந்த நாய்களைப் பார்ப்பதற்கே ஒரு பிரமிப்பாக இருக்கும்.

இதை தினந்தோறும் பார்த்துக் கொண்டே செல்வான் சசி.

மனிதர்களை விட இந்த உயிரினங்களை இந்த மனிதர்கள் எவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிறார்கள். நாய் வளர்ப்பதால் நமக்கு எப்படி என்ன கிடைத்து விடப் போகிறது ?என்ற எண்ணத்தை முற்றிலும் அழித்து அதற்கு இவ்வளவு செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு உயிரினத்தின் மேல் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை அந்தத் தெரு வழியாக நடந்து போகும் பாேதெல்லாம் உணர்ந்து கொள்வான் சசி.

ஆனால் எப்போதும் இல்லாமல் அன்று பார்த்த ஒரு காட்சி அவனை உலுக்கியது.

அன்றும் எப்போதும் போல அந்த பெட் கிளினிக்கு உயர்தர நாய்கள் வந்து சென்று கொண்டிருந்தன. ஆட்டோ, கார், பைக் என்று வந்து சென்று கொண்டிருந்தன. இவைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் காெண்டிருந்தன தெரு நாய்கள்

பெட் கிளினிக் வரும் நாய்களை வேடிக்கை பார்ப்பதும், நாயின் முதலாளிகள் நாயைப் பராமரிப்பதைப் தெரு நாய்கள் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தன .

இதைப் பார்த்த சசிக்கு என்னவோ போலானது. இந்தத் தெரு நாய்கள் மனதில் என்ன நினைத்திருக்கும்?

நமக்கும் இப்படி எஜமானர்கள் இல்லையே? நம்மைக் குளிப்பாட்டி உணவு கொடுத்துப் பராமரித்து இப்படி வாகனங்களில் அழைத்துச் செல்வதற்கு யாரும் இல்லையே? நம்மையும் பெயர் வைத்துச் செல்லமாக கூப்பிடுவதற்கும் நம் உடம்பைத் தடவி கொடுப்பதற்கும் எந்த மனிதனும் இல்லையே என்று ஏங்கி இருக்குமாே? இல்லை அங்கு வரும் பணக்கார நாய்களை சைட் அடிப்பதற்காக இந்தத் தெரு நாய்கள் காத்திருந்தனவா? எதற்காக இந்த நாய்கள் இங்கு முகாமிட்டிருக்கின்றன என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது.

எப்போதும் சரசர சரசரவென அந்தத் தெருவைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் சசி ,அன்று அந்த நாய்களைப் சிறிது நேரம் நின்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

நாய்கள் வேடிக்கை பார்த்தபடியே தான் இருந்தன. எந்த சப்தமோ குரைப்போ இல்லை. கிளினிக்கு வரும் நாய்களை ஆவலாகப் பார்த்துக் கொண்டே இருந்தன.

சிறிது நேரம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சசி, மனிதர்களுக்கு மட்டும் தான் மனது இருக்கிறதா? எல்லா உயிரினங்களுக்கும் இதயம் ஒன்றுதான் என்பதை உணர்ந்து கொண்டான்.

அந்த நாய்களின் ஏக்கப்பார்வையைப் பார்த்தபடியே வீட்டிற்கு சென்று விட்டான்.

மறுநாளும் அந்தச் சந்து வழியாகத்தான் வந்தான். அப்போதும் பெட் கிளினிக்கில் எதிரே அந்த நாய்கள் படுத்துக் கிடந்தன.

அப்போது அவன் கையில் உயர்தர நாய்கள் சாப்பிடும் உணவுகள் இருந்தன. அந்தத் தெரு நாய்களுக்கு போட்டான்.

ஆவலாக அவை சாப்பிட ஆரம்பித்தன .அங்கு படுத்திருந்த பத்து பதினைந்து நாய்களுக்கு அவனே பெயர் வைத்து அழைத்தான்.

ஒரு நாய் கூடத் திரும்பி பார்க்கவில்லை .மறுநாள் வந்தான் அதே உயர்தர உணவை போட்டான். நாய்கள் சாப்பிட்டன. அந்த நாய்களின் பெயர் சொல்லி அழைத்தான்.

பெயர் சொல்லும் போது காதை மட்டும் லேசாக தூக்கின. அதற்கு மறுநாளும் வந்தான் .அதே உயர்தர உணவு. அதே பெயர் ‘மாறி மாறி தினமும் உணவும் பெயரும் உணவும் பெயரும் என்று சொல்லி சொல்லி கூப்பிட ஆரம்பித்தான்.

அத்தனை நாய்களுக்கும் தத் தம் பெயர்கள் விளங்கின. எப்போது சசி வருவான் என்று காத்துக் கிடந்தன அந்தத் தெரு நாய்கள்.

இப்போது அவன் ஒவ்வொரு நாயாகப் பேர் சொல்லி அழைத்த போது, அவன் அருகே வந்து வாலாட்டின.

அந்தத் தெரு நாய்களுக்கு இப்போது நம்மைப் பார்ப்பதற்கு யாரும் இல்லை என்ற எண்ணம் ஓடிவிட்டது .சசி இருக்கிறான் நம்மையும் கூப்பிடுவதற்கு ஒரு ஆள் இருக்கிறான். நமக்கும் உணவு கொடுப்பதற்கு ஒரு மனிதன் இருக்கிறான் என்ற எண்ணத்தில் அந்த தெரு நாய்கள் சசியின் வருகைக்காக அந்த பெட் கிளினிக் முன்னால் காத்துக் கிடந்தன.

அந்தத் தெரு நாய்களுக்கு கிளினிக்குக்கு வரும் நாய்களை விட பெருமை கூடி நிற்பது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *