சென்னை, மார்ச் 23–
பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக இன்றும் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்துள்ளது. இது அனைத்து தரப்பினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவம்பர் 4-ந் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, கடந்த 137 நாட்களாக விலை உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டன.
நேற்று சென்னையில் பெட்ரோல் விலை 70 காசுகள் அதிகரித்து 102.16 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதுபோன்று வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையும் நேற்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால் 14 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 102.91 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 92.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு 80 காசுகள் அதிகரித்து பெட்ரோல் ரூ.97.01 ஆகவும், டீசல் ரூ.88.27 ஆகவும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனங்களின் வாடகை, காய்கறிகள், அத்தியவாசிய பொருள்களின் விலையும் மறைமுகமாக உயரும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.