செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்: கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் முடிவு

வாஷிங்டன், அக்.6–

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது தொடர்பான அறிவிப்பை கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.

உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தியை குறைப்பது தொடர்பான அறிவிப்பை சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்), நேற்று அறிவித்தது.

அதன்படி, நவம்பர் முதல் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கப்படும் என்று ஒபெக் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல் – டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய அமெரிக்கா கூறியிருப்பதாவது:-

இது ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ரஷ்யாவுடன் இணைந்து ‘கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்)’ செயல்படுவது தெளிவாக தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகம் கடுமையான எதிர்விளைவுகளை சந்தித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ள ஒபெக் கூட்டமைப்பு நாடுகளின் முடிவால் குறைந்த மற்றும் நடுத்தர வருமான கொண்ட நாடுகள் அதிகமாக பாதிப்பை சந்திக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *