செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, மார்ச் 15–

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

ராஜ்யசபையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசியதாவது:–

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்த கடந்த 2 ஆண்டுகளிலும், தற்போது ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரின் போதும், பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால், வெனிசுலா, ஈரான் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது நிலைமை மாறி வருகிறது. மிக விரைவில் இந்த நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைத் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு நாடுகளிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதைத் தவிர தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக ரஷ்யா கூறியுள்ளது. இதில் காப்பீடு, போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றைக் கவனத்தில் வைத்து தகுந்த முடிவு எடுக்கப்படும்.

‘ஓபெக்’ எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள், தங்கள் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இதனால் பல்வேறு வகைகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும் இவற்றின் விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.