செய்திகள்

பெட்ரேல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

Makkal Kural Official

சென்னை, செப். 7–

சர்வதேச சந்தையில் பெட்ரேல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஈடாக பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்காமல் கலால் வரி, செஸ். சர்சார்ஜ் என்று கூடுதல் வரி விதித்து கடந்த 9 ஆண்டுகளில் 28 லட்சத்து 33 ஆயிரம் கோடி அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது. ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2014 இல் பதவி விலகுகிற போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தது.

அப்போது பெட்ரோல் விலை ரூபாய் 72 ஆகவும், டீசல் விலை 50 ரூபாயாகவும் விற்கப்பட்டது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படுகிற இழப்பிற்கு 1 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. அப்பேது 2014 இல் கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூபாய் 9.48, டீசலில் ரூபாய் 3.56 ஆக இருந்தது. ஆனால், 2024 இல் தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 70 டாலராக சரிந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். ஆனால், இன்று பெட்ரோல் விலை ரூபாய் 100.85 ஆகவும், டீசல் விலை ரூபாய் 92.34 ஆகவும் உள்ளது. இதில் கலால் வரி பெட்ரோலில் ரூபாய் 19.90 ஆகவும், டீசலில் ரூபாய் 15.80 ஆகவும் வரி விதித்து வருமானத்தை பெருக்கிக் கொள்கிறது.

பொதுமக்கள் பாதிப்பு

ஏறத்தாழ பெட்ரோல் விலையில் 54 சதவிகிதமாகவும், டீசல் விலையில் 49 சதவிகிதமாகவும் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வோடு பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014 இல் ரூபாய் 410 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 903 ஆக இருமடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இது 120 சதவிகித உயர்வாகும். இதனால் நாடு முழுவதும் உள்ள 30 கோடிக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் குறிப்பாக தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். இந்த அடிப்படையில் விலையை குறைக்கவில்லை என்றுச் சொன்னால் பாதிக்கப்பட்ட மக்களின் கடுமையான போராட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *