சிறுகதை

பெட்டிக்கடைக்காரன் – எஸ்.பாலகிருஷ்ணன்

வடிவேலு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர். அவன் இரவு நேரக் காவலாளியாக இருப்பதால் இரவில் பணி முடிந்து வரும் போதே வீட்டுக்கு பால்பாக்கெட் அவர் படிப்பதற்கு நியூஸ் பேப்பர் சோப்பு மற்றும் பலகாரங்கள் வாங்கி வருவார்.

இவைகளை வழக்கமாக தினமும் வாங்கி வருவார்.

பெண் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள்.

வீட்டில் அவரின் மனைவியும் அத்தையும் இருக்கின்றனர்.

வடிவேலு இரவுப் பணிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம்.

இவர் பணி முடிந்தவுடன் கம்பெனி அருகிலுள்ள பெட்டிக்கடையில் மேற்கண்ட பொருட்களை மறக்காமல் வாங்கி வந்து விடுவார், வேறு எந்தக் கடையில் வாங்க மாட்டார் .

வேலை செய்யும் கம்பெனிக்கருகில் கடை இருக்கும் போது எதற்கு வேறு கடையில் பொருட்கள் வாங்க வேண்டும்.

அது போக அவர் அந்தக் கடைக்கு வாடிக்கையாளராகி விட்டார். இந்தக் கடையில் வாங்கி வந்த பாக்கெட் பாலை காலை ஏழு மணிக்கு மனைவியின் கையால் போட்ட காபியுடன் காலை நாளிதழை விறுவிறுப்பாக படித்துக் கொண்டிருப்பார். இது வழக்கமான விசயம் தான்.

அன்றொரு நாள் காலை வடிவேலு வழக்கம் போல் இரவுப் பணி முடிந்து அவர் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய உடன் பிறந்த தங்கை மகன் தாய் மாமா வடிவேலுவை பார்க்க வேகமாக வந்தான்.

மாமா நான் நம்ம தெருவுல ஒரு பெட்டிக்கடை போடலாமுன்னு நினைச்சிருக்கேன். உங்க ஆதரவு வேணும் என்றான்.

தாராளமா பெட்டிக்கடை போடு மாமாவோட ஆதரவு என்னைக்கும் இருக்கும்டா என்று சந்தோசம் பொங்க கூறினார்.

இதைக்கேட்ட வடிவேலு தங்கை மகன் ரொம்ப சந்தோசம் மாமா சீக்கிரமே பெட்டிக் கடையை ஆரம்பிக்கிறேன். நீங்க பால் பாக்கெட், சோப்பு, டூத் பிரஷ் எல்லாமே வாங்கிக்கலாம். வெளியே எங்கேயும் நீங்க வாங்க வேண்டாம்.

நம்ம கடையிலேயே வாங்கிக்கோங்க மாமா என்றுக் கூறிக் கொண்டு கிளம்பினான்.

ஒரு மாதம் சென்றது

வடிவேலுவின் தங்கை மகன் அவரிடம் சொன்னது போல் அவர் குடியிருக்கும் வீட்டருகில் ஒரு பெட்டிக்கடையை வைத்து விட்டான். அந்தக்கடையில் அனைத்து பொருட்களும் இருந்தன.

பால் பாக்கெட் சோப்பு, சீப்பு, வாழைப்பழம், மிட்டாய் ஐட்டங்கள் போன்ற பொருட்கள் இருந்தன. அந்தப்பெட்டிக் கடையை வடிவேலு பூசை செய்து திறந்து வைத்தார்.

வியாபாரம் நல்ல நடக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

மறுநாள் வடிவேலு இரவுப் பணி முடிந்து கம்பெனி வாசலில் உள்ள பெட்டிக்கடையில் இருந்தவரிடம் அண்ணே என்னோட தங்கச்சி மகன் புதுசா பெட்டிக்கடை ஆரம்பிச்சி இருக்கான்; அந்தக்கடையில் பால் பாக்கெட், சோப்பு, எல்லாம் இருக்கு; அவன் அங்கேயே வாங்கச் சொல்லுறான். நீங்க தப்பா நினைக்காதீங்க என்றார்

அதற்கு அந்தப் பெட்டிக் கடைக்காரர் பரவாயில்லண்ணே நான் தப்பா நினைக்க மாட்டேன். நீங்க உங்க தங்கச்சி மகன் கடையிலேயே வாங்கிக்கோங்க என்றார்.

வடிவேலுவும் நேராக வீட்டிற்கு வந்து தங்கையின் மகன் கடையில் பால் பாக்கெட், சோப்பு, டூத் பிரஷ், தேங்காய் எண்ணெய் உள்பட வாங்கினார்.

அப்போது தங்கையின் மகன் மாமா எல்லா பொருட்கள் வாங்கி ஒரே ஒரு பொருள மட்டும் வாங்காம இருக்கிறீங்க என்று கேட்டான்.

அதற்கு வடிவேலு என்ன போருள் வாங்கல எனக்கேட்டார்.

நீங்க நியூஸ் பேப்பர் வாங்கல மாமா என்று அவன் சொல்ல. ஓ நீயூஸ் பேப்பரா அது நான் கம்பெனியில வேலை பாக்குற இடத்தில எனக்கு ஓசியா கிடைச்சிடும். அதை எடுத்துட்டு வந்துடுவேன் என்றார் வடிவேலு.

அப்படியா மாமா சரி என்று கடையில் வியாபாரத்தை பார்க்கலானான்.

இந்த விசயத்தில் வடிவேலு பொய் சொன்னது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

வருடக்கணக்கில் கம்பெனியருகில் இருந்த பெட்டிக்கடையில் தான் பால் பாக்கெட் மற்றும் நியூஸ் பேப்பர் வாங்கி வந்தவர்;

அந்தக் கடையின் நீண்ட கால வாடிக்கையாளராச்சே. அந்தக் கடைக்காரர் பழக்கத்தை மறக்க விரும்பாதவர்.

காசு கொடுத்து பேப்பர் வாங்கும் வழக்கத்தை விட முடியாமல் இருந்தவர் அவரின் வியாபாரமும் நடக்கவேண்டும். நமது தங்கை மகனின் வியாபாரமும் நடக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் வடிவேலு இப்படி நியூஸ் பேப்பர் விசயத்தில் பொய் சொல்லியிருக்கிறார்.

அவரது நோக்கம் வாழ்க்கையில் யாருடைய மனகசப்புக்கும் ஆளாகக் கூடாது என்பதே.

எல்லோருடைய நட்பும் வேண்டுமென்று விரும்பிய வடிவேலு மனம் மதிப்பிற்குரியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *